திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக 2 மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் மேகாலயாவில் ஆட்சி அமைக்கவுள்ள தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.
இந்துக்களின் வாக்குகளால் மட்டுமே பாஜக வட இந்தியாவில் வெற்றி பெறுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி இந்த கூற்றை பொய் என நிரூப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக சிறப்பாக செயல்பட என்ன காரணம்?
திரிபுரா
கடந்த 2018ம் ஆண்டு பாஜக மற்றும் ஐ.பி.எஃப்.டி கட்சிகளின் கூட்டணி திரிபுராவின் 60 தொகுதிகளில் 44ல் வெற்றி பெற்று 1993ல் தொடங்கிய இடதுசாரிகளின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சி.பி.ஐ.எம் ஆல் வெறும் 16 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
இந்த ஆண்டு திரிபுராவில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. ஆனால் இது அவ்வளவு எளிதான சாதனையல்ல.
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் கைகோர்த்திருந்தன. பாஜகவின் உள்ளூர் கூட்டணி கட்சியான ஐ.பி.எஃப்.டி பிரிந்து சென்று புதிய கட்சியான திப்ரா மோதாவுடன் சேர்ந்தது. இது பாஜகவிற்கு பெரும் சோதனையாக அமைந்தது.
ஏனென்றால் திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 இடங்களில் கணிசமான அளவு பழங்குடியினர் உள்ளனர். எனவே திப்ரா மோதா -ஐபிஎஃப்டி கட்சிகளின் கூட்டணி பாஜகவின் அரசியல் நோக்கத்தை சீர்குலைக்கும்.
இருப்பினும் தேர்தலுக்கு முன் கடைசி நேரத்தில், பாஜக தனது முன்னாள் கூட்டாளியான ஐ.பி.எஃப்.டியை திப்ரா மோதா கட்சியில் இருந்து விலக்கி மீண்டும் தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.
அதேசமயம் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு டிசம்பர் 1, 2022 முதல் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதம் உயர்த்தி, அகவிலை நிவாரணத்தையும் அறிவித்தது. பாஜக அரசு இவ்வாறு அகவிலைப்படியை உயர்த்தியது வாக்காளர்களை கவர்ந்திருக்கலாம்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மாநிலத்தில் 1,04,600 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 80,800 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. இதற்கு பிரதமர் மோடியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களே காரணம் என கூறப்பட்டது.
நெடுஞ்சாலைகள் கட்டுவது, குடிநீர், இலவச ரேஷன், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவது போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்தவும் மாநிலத்தில் அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு எவ்வளவு நெருக்கமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டது என்பதையும் இப்பகுதி மக்கள் முதன்முறையாகப் பார்த்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களாலேயே பாஜக மீண்டும் திரிபுராவில் ஆட்சி அமைக்க காரணம் என்பதே உண்மை.
நாகாலாந்து
பல உள்ளூர் பிரச்சனைகளை கொண்ட நாகாலாந்தில், பாஜக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான என்டிபிபி 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் பெரும்பான்மை வாக்குகள் கொண்ட பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் 26 இடங்களை வென்ற நாகா மக்கள் முன்னணி கட்சி இந்த முறை இரட்டை இலக்கத்தில் வாக்குகளை பெற போராடியது. அதே நேரத்தில் காங்கிரஸால் இந்த தேர்தலில் தனது இருப்பை காட்ட முடியவில்லை.
நாகா மக்களின் உள்ளூர் பிரச்சனைகளை பாஜக திறமையாக கையாண்டதே காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக காலூன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் ஏழு கிளர்ச்சி குழுக்களை உள்ளடக்கிய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் நாகா தேசிய அரசியல் குழுக்கள் ஜனவரி 14ம் தேதி பாஜக அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாகாக்களின் உரிமைகளைத் தீர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை கூட்டாக அறிவித்தன.
அதைத் தொடர்ந்து நாகாக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு 2015ல் என்.சி.சி.என்(ஐ.எம்) உடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2017 ஆம் ஆண்டில், நாகா தேசிய அரசியல் குழுக்கள் அரசாங்கத்துடன் ‘ஒப்புகொண்ட நிலைப்பாட்டில்’ கையெழுத்திட்டபோது, அனைத்து கிளர்ச்சிக் குழுக்களுடனும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக மத்திய அரசு கூறியது.
ஆனால் நாகாக்கள் அமைப்பு தங்களுக்கு தனிக் கொடி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தேவை என்பதில் பிடிவாதமாக இருப்பதால் இறுதித் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் தற்போது நாகாலாந்து மாநிலத்தில் பா.ஜ.க அரசு மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான கவனம் ஆகியவை மக்களை பாஜகவுக்கு சாதகமாக மாற்றியுள்ளது.
மேகாலயா
மேகாலயாவில் கடந்த 2018ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த முறையும் பாஜக இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு 30 இடங்கள் தேவைப்படும் நிலையில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டு தேர்தலில் 21 இடங்களை பெற்ற காங்கிரஸ், இந்த முறை வெறும் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதேப்போல் மேகாலயாவில் புதிதாக நுழைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸும் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் முந்தைய எண்ணிக்கையில் சிறிய முன்னேற்றம் இருந்தபோதிலும், ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதால் மற்றொரு வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவின் அதிகாரம் இருக்கும் என்று கூறலாம்.
அசாம் மாநிலம் உடனான மேகாலயாவின் எல்லை பிரச்சனை தீரும் வரை அங்கு பாஜக ஆழமாக காலூன்றுவது கடினம். ஏனென்றால் அசாமில் பாஜக ஆட்சி நடப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அசாமுக்கு சாதகமாக செயல்படும் என்ற எண்ணம் மேகாலயா மக்கள் மனதில் உள்ளது. எதிர்க்கட்சிகளும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.
இதனால் மேகாலயாவில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது உண்மை. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய பாஜக அரசு காட்டும் கவனம் மற்றும் சாதுர்யமான தேர்தல் வியூகம் ஆகியவை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக பாஜகவை நிலைநிறுத்தியுள்ளது.