கோவை C.P. சுப்பையா | சுதந்திரம்75

கோவை C.P. சுப்பையா | சுதந்திரம்75

Share it if you like it

கோவை C.P. சுப்பையா

சி.பி.எஸ். என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்பட்ட சுப்பையா, 1901 ஆம் ஆண்டு கோவை நகரில், பெரியண்ண முதலியார் – மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதில், 1920 முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டவர், சுப்பையா.

மகாத்மா காந்தியடிகளிடம் அளவற்ற பக்தியும், தேசப்பற்றும் மிகுதியாக உடையவர். அந்தக் காலத்தில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்த முறையே வித்தியாசமானது. ஒரு சிறுவன் கையில் ஒரு தகரடப்பாவைக் கொடுத்து அதை ஒரு குச்சியால் தட்டிக் கொண்டே சென்று, ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் நின்று, பிரச்சாரம் செய்வார். பொதுக்கூட்ட விளம்பரங்களும்  இதே  முறையில் தான்.

இவருக்கு நல்ல பேச்சு வன்மை இருந்தது. கூட்டங்களில் மணிக்கணக்காக பேசுவார். இவரது பேச்சு, தேசபக்தியைத் தூண்டுவதாக இருக்கும். மகாகவி பாரதி உட்பட பல தேசிய கவிஞர்களின் கருத்துக்களை உரத்த குரலில் பாடி, உரையாற்றும்  போது,  மக்கள்  மெய் மறந்து கேட்பர். தேசபக்த விதை மக்கள் மனதில் பதியும் வண்ணம், இவரது உணர்ச்சிகரமான பேச்சு அமைந்திருக்கும்.

1920 தொடங்கி 1942 வரையில் இவர் பங்கேற்காத காங்கிரஸ் போராட்டக் களமே, கோவை பகுதியில் கிடையாது எனும் படி எங்கும் எதிலும் முன்னணியில் இருந்தார். 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பின்னர் ,ராஜாஜி  நடத்திய வேதாரண்யம்  உப்பு சத்தியாக்கிரகத்தில், கோவையிலிருந்து இவரும், இவரோடு தொழிலதிபர்  ஜி.கே.சுந்தரம் ஆகியோர் பங்கு கொண்டு சிறை சென்றனர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கள் குடியால் ஏழை எளியவர்கள் படும் துயரங்களை எடுத்துக் கூறி, ‘மது அருந்த வேண்டாம்’ என்று இவர் கேட்டுக் கொண்டதற்காக  இவர் பட்ட அடிகளும், அவமானங்களும் எண்ணில் அடங்கா. கள்ளுக்கடை மறியல் நடந்த போது, கள்ளுக்கடை அதிபர்கள் அடியாட்களை வைத்து இவரை நையப் புடைத்தனர். ஒரு இடத்தில் செருப்பால் அடித்து, அவமானம் செய்தனர். இவ்வளவும் இந்த நாட்டுக்காக, இந்த ஏழை உழைக்கும் மக்களுக்காக என்ற உணர்வோடு அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டார். அப்படி இவர் அடிபடும் போது கூட இவர் கேட்டுக் கொண்டது என்ன தெரியுமா, என்னை அடியுங்கள், கொல்லுங்கள், ஆனால் கள் குடிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள். உங்கள் பெண் பிள்ளைகளை வாழ விடுங்கள் என்று கெஞ்சினார். பல இடங்களில் கள்ளுக்கடை அதிபர்கள் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான அவமானங்களைத் தொண்டர்களுக்கு இழைத்திருக்கின்றனர். சிலர் தலையில் கள்ளை ஊற்றி அபிஷேகம் கூட செய்து இருக்கின்றனர்.

சாதாரண தொண்டரான சி.பி.சுப்பையா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகாத்மா காந்தி அறிவித்த 1942 ‘க்விட் இந்தியா’ போராட்டத்தில், கலந்து கொண்டு  சிறை சென்றார்.

சுதந்திர இந்தியாவில் நாட்டு விடுதலைக்குப்  பாடுபட்டவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கப்பட்ட போதும், தியாகிகள் ஓய்வூதியம் தரப்பட்ட போதும் அவற்றை வாங்க மறுத்து விட்டார் தன் சகோதரரையும், வாங்கக் கூடாது என்று தடுத்து விட்டார்.


Share it if you like it