காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜாஜியின் கொள்ளுப் பேரனுமான சி.ஆர். கேசவன் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. இவரது, கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன். இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அக்கடிதத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
இந்தியாவிற்கு, சேவை செய்யும் பொருட்டு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பினேன். இதையடுத்து, கடந்த 2001 – ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தேன். கட்சிக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால், எனது உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. கட்சியும் தனது செல்வாக்கினை இழந்து வருகிறது. அதன் காரணமாகவே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கவில்லை.
“நான் புதிய பாதையை வகுப்பதற்கான நேரம் இது. ஆகவே, காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அறங்காவலர் பதவியிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். கட்சி தற்போது எதை அடையாளப்படுத்துகிறதோ, எதை இப்போது பிரசாரம் செய்ய முயல்கிறதோ அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை அந்த கடிதத்தில் இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமாக இருந்தவர் ஏ.கே.ஆண்டனி. இவரது, மகன் அனில் ஆண்டனி, காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவதாக அண்மையில் கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.