பஞ்சாரா கும்பமேளா – மதமாற்றத்தை தடுக்குமா ?

பஞ்சாரா கும்பமேளா – மதமாற்றத்தை தடுக்குமா ?

Share it if you like it

பஞ்சாரா கும்பமேளா – மதமாற்றத்தை தடுக்குமா ?


இந்தியாவில் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் வசிக்கும் பஞ்சாரா மற்றும் லபனா நைகடா சமூகத்தினர் ஒன்று கூடும் கும்பமேளா ஜனவரி 25ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள கோத்ரியில் நடைபெற்று வரும் இந்த கும்பமேளா 30ம் தேதி நிறைவடைகிறது.
பஞ்சாரா பழங்குடி சமூகம் நீண்ட வரலாற்றை கொண்டது. விவசாயம் மற்றும் வர்த்தக தொழிலை செய்து வந்த இந்த சமூகம் சனாதான தர்மத்தை பின்பற்றி வந்தது. மகாகாளி, மாதா கௌரி, திருப்பதி ஏழுமலையான், பஞ்சாரி தேவி ஆகிய தெய்வங்களை இந்த சமூகத்தினர் தங்கள் குலத்தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். மேலும் பல துறவிகளையும் இவர்கள் தங்கள் குருவாக ஏற்று வழிப்பட்டு வருகிறார்கள். துறவிகளின் எண்ணங்கள் புனிதமானது என்று இவர்கள் நம்புகிறார்கள்.
பஞ்சாரா சமூகம் வரலாற்றில் பல அடக்குமுறைகளை எதிர்க்கொண்டுள்ளது. படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தங்கள் உரிமைகளை மீட்க பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக தங்கள் நிலங்களை கையகப்படுத்த முயன்ற ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று போராடியவர்கள். இதனால் பஞ்சாரா சமூகம் “குற்றவாளி சமூகம்” என்று முத்திரை குத்தப்பட்டு கடுமையான இன்னல்களுக்கு ஆளானது. பின்னர் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட போதிலும், பஞ்சாரா சமூகம் இன்றும் கடுமையான வறுமையில் வாழ்கிறது.
கிராமங்களில் இருந்து ஒதுக்குப்புறமாக ‘தண்டா’ எனப்படும் காலனிகளில் வாழ்ந்து வரும் பஞ்சாரா சமூகத்தினர் கால மாற்றத்தாலும் அரசு உதவிகளாலும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் வறுமையான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பலர் வாழ்வாதாரத்துக்காக தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.
பஞ்சாரா சமூகத்தின் வறுமையை பல கிறிஸ்துவ மிஷினரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. அவர்களது சமூகத்தினர் பலரை மதம் மாற்றி வருகின்றன. ஆனால் கிறிஸ்துவராக மதம் மாறியவர்களும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் இந்து மத பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பஞ்சாரா சமூகத்தில் அதிகரித்து வரும் மதமாற்றத்தை தடுப்பதற்கும் பஞ்சாரா சமூகத்தை ஒன்றிணைத்து அவர்களுக்கு தங்கள் முன்னோர்களின் இந்து பாரம்பரியம், கலாச்சரத்தை மீண்டும் நினைவுப்படுத்தவும் பஞ்சாரா சமூகம் பல இந்து அமைப்புகள் உதவியுடன் கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மகாராஷ்டிர அரசு இந்த கும்பமேளாவுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. குடிநீர் வசதி, சுகாதாரத்திற்காக மட்டுமே 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கைக்கு பல விமர்சனங்கள் எழுந்தன. பஞ்சாரா சமூகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் இந்து மத சாயத்தை பூச இந்த முயற்சியை எடுப்பதாக குற்றம்சாட்டின.
பல ஆயிரம் வருடங்களாக இந்து மதத்தை பின்பற்றி வரும் பஞ்சாரா சமூகத்தின் கலாச்சார நிகழ்வுக்கு இந்து அமைப்புகள் ஆர்வம் காட்டுவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு ?. இந்த கும்பமேளா நிகழ்ச்சி வெற்றி பெற்றால் பல ஆண்டுகளாக கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்தி வரும் மத வேட்டைக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
கும்பமேளா துவக்க நாளான ஜனவரி 25ம் தேதி பஞ்சாரா சமூகத்தில் நடந்து வரும் மதமாற்றம் குறித்து பேசிய அந்த சமூகத்தின் தலைமை பூசாரியான போஹராகாத், பேசுகையில் ‘‘பஞ்சாரா சமூகத்தினரின் 3000 தண்டாக்களிலும் கிறிஸ்துவ மதமாற்றம் நடந்து வருகிறது. எங்கள் சமூகத்தை சேர்ந்த பலர் கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டனர். அவர்கள் அனைவரையும் தாய் மதத்திற்கு மீண்டும் அழைத்து வர நானும் மற்ற துறவிகளும் உறுதிப்பூண்டுள்ளதாக கூறினார்.
பஞ்சாரா சமூகத்தினர் இந்த தேசத்தில் சமூக, பொருளாதார, ஆன்மீக ரீதியில் முன்னேற வேண்டும். அப்போது தான் பஞ்சாரா சமூகத்தினரை முன்னேற விடாமல் அவர்களை வைத்து மத அரசியல் செய்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். இந்த கும்பமேளா நிகழ்ச்சி பஞ்சாரா சமூகத்தின் சிறந்த எதிர்காலத்துக்கு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என நம்புவோம்.


Share it if you like it