நமது அடையாளத்தை அழிக்க நினைக்கலாமா.?

நமது அடையாளத்தை அழிக்க நினைக்கலாமா.?

Share it if you like it

நமது நாட்டில், எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. “கோவில்” என்பது, “இறைவனின் இருப்பிடம்”. ஒவ்வொரு கோவிலிலும், ஒரு வரலாற்று சம்பவங்கள், பின்னிப் பிணைந்து உள்ளன.

நமது நாட்டை சேர்ந்த எவர் ஒருவர், வெளிநாட்டில் வசித்தாலும், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, பிரம்மாண்டமான கோவில்களை கட்டி, அங்கு வழிபாடு செய்து வருவார்கள். பிரம்மாண்டமான கோவில்கள்,‌ பழங்காலம் தொட்டே, ராஜராஜ சோழன் போன்ற மன்னர்கள் வாழ்ந்த காலம் முதல் தற்போது வரை, காட்சி அளிக்கின்றன.

தமிழகத்தின் இலச்சினையாக, ஆண்டாள் பிறந்த இடமான, ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரமே, தமிழக அரசின் அடையாளச் சின்னமாக, இருந்து வருகின்றது.

கோவில்களின் வகைகள் :

திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய தேவாரப்பதிகம் ஒன்றில், பல வகையான கோவில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழல் கோயில்
கருப்பறில் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழந்து
தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீருமன்றே…”

பெருங் கோவில் – பெரிய விமானங்கள், மண்டபங்கள் கொண்டது,

கரக் கோவில் – தேரைப் போன்ற அமைப்பு கொண்டது,

ஞாழற் கோவில் – மரத்தின் நிழலில் அமைந்தது,

கொகுடிக் கோவில் – முல்லைக் கொடி படர்ந்த சூழ்நிலையில் அமைந்தது,

இளங் கோவில் – கர்ப்பகிரகம் மட்டும் அமைந்தது,

மணிக் கோவில் – மணி போன்ற விமான அமைப்பு கொண்டது,

ஆலக் கோவில் – நீர் சூழந்த இடத்தில் அமைந்தது,

மாடக் கோவில் -யானைகள் ஏற இயலாதவாறு, படிகள் பல கொண்டது,

மணிக் கோவில் – அழகிய வண்ணம் தீட்டப் பட்டு, சிற்பங்களுடன் அமைந்தது,

தாழக் கோவில் – மலை அடிவாரத்தில் அமைந்தது,

என பல்வேறு வகையான கோயில்களை, அப்பர் குறிப்பிடுகிறார்.

மன்னர்கள் கட்டிய கோவில்கள் :

ஒவ்வொரு மன்னர்களும், ஒவ்வொரு வகையில் கோவில்களைக் கட்டி, இறை வழிபாட்டை சிறப்பித்தார்கள்.

சோழ மன்னர்கள் – பல அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களுடன், பெரிய கோபுரங்களுடன் கோவில்களைக் கட்டினர்,

பல்லவ மன்னர்கள் – கல்லில் கோவில்களைக் கட்டினார்கள்,

பாண்டிய மன்னர்கள் – உயரமான கோபுரங்கள், பெரிய மதில் சுவர்கள், பிரமாண்ட நுழைவு வாயில்கள் என கோவில்களைக் கட்டினார்கள்,

விஜயநகர மன்னர்கள் – அழகாக செதுக்கப் பட்ட, ஒற்றைக் கல் தூண்களில், கலை நயத்துடன் கோவில்களைக் கட்டினார்கள்,

நாயக்கர் மன்னர்கள் – பெரிய பிரகாரம், தூண் வகைகளை கொண்டு கோவில்களைக் கட்டினார்கள்.

இவ்வாறு, எல்லா மன்னர்களுமே, தங்களால் முடிந்த அளவில் கோவில்களைக் கட்டி, மக்கள் அனைவரும் தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்தார்கள். கோவில்கள் என்றென்றும், சுய சார்பாக விளங்க வேண்டும் என்பதற்காக, அதற்கெனவே பிரத்தியோகமாக, பல நிலங்களையும், சொத்துக்களையும் வைத்து சென்றார்கள். அவ்வாறு, நன்கு பராமரிக்கப்பட்ட கோவில்களின் இன்றைய நிலையை  நினைத்தால், இந்து சமய பக்தர்களுக்கு, மிகுந்த கவலையைத் தருகின்றது.

ஆங்கிலப் பத்திரிகை செய்தி எதிரொலி :

புராதன கோவில்கள், கட்டிடங்கள், பாதுகாப்பு ஆணையம் அமைத்தல், விதிகள் ஏற்படுத்துதல், மகாபலிபுரம் உலக புராதன பகுதி மேலாண்மை ஆணையம் அமைத்தல் போன்றவை தொடர்பாக, எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை என ஆங்கிலப் பத்திரிகையில்,  ஜனவரி 2015 ஆம் ஆண்டில் செய்தி வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையில், அன்றைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் R. மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு அடங்கிய, சிறப்பு அமர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்த சிறப்பு அமர்வு, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 தொடங்கி, 2021 ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி வரை, தொடர்ந்து ஆறு வருடங்கள் ஐந்து மாதம் என மொத்தம் 77 மாதங்கள் விசாரணை நடத்தி, இறுதியாக ஜூன் 7-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு அன்று, இறுதித் தீர்ப்பு வழங்கி, தமிழக அரசிற்கு பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, செயல் படுத்துமாறு அறிவுறுத்தியது.

நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • நூறு ஆண்டுகளுக்கு மேலான, பழமை வாய்ந்த கோவில்களை, தொல்லியல் துறை ஆய்வு செய்து, அதன் சேதத்தை மதிப்பிட வேண்டும். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
  • புராதான சின்னங்கள், ஓவியங்கள், கோவில்கள், சிலைகள், பழமை வாய்ந்த பொருட்களை பாதுகாத்திடல் வேண்டும்.
  • தமிழக அரசிற்கும், மகாபலிபுரம் மேலாண்மை ஆணையத்திற்கும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக, 17 நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, 8 வாரங்களில் அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில், மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள், தகுதியான ஸ்தபதி, ஆகம சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும்.
  • கோவில்களில் பழமையான கைவண்ணக் கலைப் பொருட்களை பாதுகாக்க வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும். பழமை வாய்ந்த பொருட்களுக்கு, ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதனுடைய பாரம்பரிய குறிப்புகள் பாதுகாக்கப் பட்டு, பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.
  • கோவில் நிதியை, முறையாக பராமரிக்க வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, அந்தந்த மாவட்ட குழுக்கள், கணக்கெடுக்க வேண்டும். காலி இடங்கள், குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் போன்ற விவரங்களை, சேகரிக்க வேண்டும்.
  • கோவில்களுக்கு, நிலத்தை தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, நிலங்களை விற்கவோ, யாருக்கும் கொடுக்கவோ கூடாது. கோவில் வசம் தான், இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
  • கோவில்களில் உள்ள சிலைகளை, கணக்கு எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் போன்றவற்றை முறையாக பாதுகாக்க, அதற்கான சொத்துப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கோவிலிலும் உள்ள சிலைகள் மற்றும் கோவிலுக்கு, சொந்தமான நகைகளை, புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.

மற்றும் பல…

சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு :

2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி, தமிழக சட்டசபையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, விவாதம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், அதிரடி அறிவிப்பு, ஒன்றை வெளியிட்டார்.

பக்கம் எண் 2 வரிசை எண் 4: “திருக்கோயில்களில் காணிக்கையாக பெற்ற நகைகளை, திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, மற்ற நகைகளை, மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான, தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, வங்கிகளில் முதலீடு செய்து, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு, திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்”…

இதுபோன்ற அறிவிப்பால், தமிழக பக்தர்கள், மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

பழமையான நகைகள் மூலமாகவே, கடந்த கால பாரம்பரியங்கள், அடுத்த சந்ததியினருக்கு தெரிய வரும். எந்த சூழ்நிலையிலும்,

கோவில்கள், நிதி உதவிக்காக, மற்றவர்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாது என்பதற்காகவே, பல நிலங்களையும், வயல்களையும்,  மன்னர்கள் கோவில்களுக்கு தானமாக வாரி வழங்கி சென்றனர்.

மாமன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதி, தனது மருமகன் தண்டத்தேவர், ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம், பரிசல் பணம் பெற்றதற்காக, தனது மகள்கள் விதவைகள் ஆனாலும் பரவாயில்லை எனக் கருதி, தனது மருமகன் தண்டத்தேவருக்கு மரண தண்டனை விதித்தார். இது போன்று, எண்ணற்ற மன்னர்கள், தமிழகத்தின் கோவில்களை நன்கு நிர்வகித்து வந்தனர்.

ஏன் இந்த பாகுபாடு:

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான, “வாமனர்” வைத்து கொண்டாடப் படும், “ஓணம்” பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர், விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான, “கிருஷ்ணர்” பிறந்த “கிருஷ்ண ஜெயந்தி”க்கு மற்றும் “விநாயகர் சதுர்த்தி”க்கு, வாழ்த்துக்கள் சொல்வது இல்லை.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், தாக்கல் செய்த மானிய கோரிக்கையில், நீதிமன்ற அறிவுறுத்தல் சம்பந்தமாக, ஏதேனும் வருமா!? என பக்தர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து இருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது!

கோவில்களில் உள்ள நகைகளை, முறையாக பராமரித்து, சொத்துப் பட்டியல் தயாரிக்கும் பணிகளை செய்தாலே, நமது பாரம்பரியமான சொத்துக்கள் பாதுகாக்கப் படும். அதன் மூலம், பண்டைய கால நாகரிகங்கள், அடுத்த தலை முறையினருக்கு, தெரிய வரும், ஆனால், அவற்றை செய்யாமல், அதை அழிக்க நினைப்பது, பக்தர்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. காப்பாற்ற வேண்டிய நமது அடையாளத்தை, அழிக்க நினைப்பது தடுக்கப் படுமா? என்பதே பக்தர்களின் எண்ணமாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருகின்றது.

             –  .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it