கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா

கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா

Share it if you like it

கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா
பாரத அரசின் உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதை பெற்ற 6வது வீரர் கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா ஆவார். இவர் 1935 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ஷகர்கருக்கு (பழைய ஐக்கிய பஞ்சாப்) அருகிலுள்ள ஜம்வால் கிராமத்தில் பிறந்தார். இவர் ஸ்ரீ முன்ஷி ராம் மற்றும் ஸ்ரீமதி தன் தேவியின் மகன்.
குர்பச்சன் சிங் 1946 இல் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் ராயல் இந்திய ராணுவக் கல்லூரியில் (இப்போது ராஷ்ட்ரிய ராணுவப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது) சேர்ந்தார். பின்னர் ஜலந்தர் கிங் ஜார்ஜ் ராயல் மிலிட்டரி கல்லூரிக்கு (தற்போது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ராஷ்டிரிய ராணுவப் பள்ளி சேயில்) சென்றார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியின் 9வது தொகுதியிலும், அதன்பின் இந்திய ராணுவ அகாடமியிலும் சேர்ந்தார்.
ராணுவ பயிற்சி முடித்த பின் 1957 ஆம் ஆண்டில், வீரத்துக்கு பேர் போன முதலாம் கோர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் 1960ம் ஆண்டு பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ சுதந்திரம் பெற்றது. ஆனால் உடனடியாக அங்கு காங்கோ ராணுவத்தில் கிளர்ச்சி வெடித்தது. காங்கோவில் இருந்த வெள்ளை நிறத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
இந்த சூழ்நிலையை சமாளிக்க காங்கோ அரசாங்கம் ஐநாவின் உதவியை நாடியது. அதைத் தொடர்ந்து பலநாட்டு வீரர்களை கொண்ட ஐநா அமைதிப்படை காங்கோவுக்கு அனுப்பப்பட்டது. காங்கோவில் ஐநாவின் நடவடிக்கை ஜூலை 1960 முதல் ஜூன் 1964 வரை நீடித்தது.அதில் பாரத அரசு சார்பில் 1961ம் ஆண்டு மார்ச் மாதம் 99 பேர் கொண்ட காலாட்படை பிரிவு காங்கோவுக்கு அனுப்பப்பட்டது.
கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவின் படைப்பிரிவான 1 கோர்க்கா ரைபிள்ஸ் காங்கோவில் ஐ.நா. நடவடிக்கைக்கான இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தது. காங்கோவில் உள்ள பெல்ஜியப் படைகள் திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்தல், உள்நாட்டுப் போரைத் தடுப்பது மற்றும் ஐநா கட்டளையின் கீழ் இல்லாத அனைத்து வெளிநாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்து கூலிப்படையினரையும் அகற்றுவது ஆகியவை இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.
டிசம்பர் 1961 இல், கேப்டன் சலாரியாவின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவு, ஐநா படையின் தலைமையகமான கடங்கா மாகாணத்தில் உள்ள எலிசபெத்வில்லில் நிலைநிறுத்தப்பட்டது. இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மோதல்கள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி அன்று, விமானநிலையத்திற்கு அருகே கிளர்ச்சியாளர்களால் அமைக்கப்பட்ட சாலைத் தடைகளை அகற்றும் சவாலான பணிக்காக கேப்டன் சலாரியா நியமிக்கப்பட்டார்.
கேப்டன் சலாரியா 16 வீரர்களைக் கொண்ட சிறிய படையுடன், 3-இன்ச் மோர்டார் ஆதரவுடன், எலிசபெத்வில்லி விமானநிலையத்திற்கு அருகிலுள்ள எதிரிகளின் நிலையை தாக்கி அதை கைப்பற்றினார். இருப்பினும், கேப்டன் சலாரியாவும் அவரது படைப்பிரிவும் ஆயுதம் ஏந்திய ஏராளமான கிளர்ச்சியாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தனர். கிளர்ச்சிப் படையில் 90 ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் இரண்டு கவச வாகனங்கள் இருந்தன.
எதிரிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்த போதிலும் கேப்டன் சலாரியா தன் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களை எதிர்த்து நிற்க செய்தார். “மகாகாளிக்கு வெற்றி, கூர்க்காக்கள் இங்கே இருக்கிறார்கள்” என்று பொருள்படும் “ஜெய் மஹாகாளி, அயோ கூர்காலி” என்ற கூர்க்கா முழக்கத்துடன் தனது வீரர்களை வழிநடத்தி ஒரு கொடிய தாக்குதலைத் தொடங்கினார்.
“கோழையாக இருப்பதை விட சாவதே மேல்” என்று பொருள்படும் “காஃபிர் ஹுனு பந்தா மர்னு ராம்ரோ” என்ற தனது படைப்பிரிவின் பொன்மொழியை எடுத்துக்காட்டும் வகையில் அவர் தைரியத்துடன் போர்க்களத்தில் நுழைந்தார்.
கேப்டன் சலாரியா கிளர்ச்சியாளர்களை மூர்க்கமாகத் தாக்கினார். பலரை நேருக்கு நேர் போராடி வீழ்த்தினார். எனினும் கடும் துப்பாக்கிச் சண்டையின் போது அவர் கழுத்தில் 2 தோட்டாக்கள் பாய்ந்து கீழே விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேப்டன் சலாரியா மற்றும் அவரது வீரர்களின் தொடர்ச்சியான தாக்குதலால் முழு கிளர்ச்சிப் படையும் விரைவில் சீர்குலைந்து பின்வாங்கியது.
கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவின் துணிச்சல், தியாகம், அவரது சிறந்த தலைமைத்துவம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் நாட்டின் மிக உயரிய வீர விருதான “பரம் வீர் சக்ரா” விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஐ.நா. அமைதிப்படையில் ஈடுபட்டு பரம் வீர் சக்ரா விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயர்ந்த வீரத்தையும் தியாகத்தையும் போற்றி தலை வணங்குவோம்.


Share it if you like it