அனல் தவிக்கும் காவிரி விவகாரம் – இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு

அனல் தவிக்கும் காவிரி விவகாரம் – இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு

Share it if you like it

அரை நூற்றாண்டுகளாக காவிரி நதிநீர் பங்கிட்டு பிரச்சனை கர்நாடகா தமிழகம் மாநிலங்களிடையே பெரும் அரசியல் சிக்கலுக்கு காரணமானது. ஆரம்பத்தில் நதிநீர் பங்கீடு என்பதில் தொடங்கிய சிக்கல் நாளடைவில் கர்நாடகம் தமிழ்நாடு என்று பிரிவினை அரசியலுக்கு தாவியது. நாளடைவில் கன்னடர் தமிழர் என்ற இன பிரிவினைவாத அரசியலுக்கும் வழிகோலியது. இரண்டு மாநிலங்களிலும் இருந்த பிரிவினைவாதிகள் இதை வைத்து பெரும் சமூக விரோத செயல்களையும் இரு மாநிலங்களுக்கும் நல்லுறவு சீர்குலைக்கவும் தேவையான அத்தனை அராஜகத்தையும் முன்னெடுத்தார்கள். ஆனால் இந்த சமூக விரோதிகளை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கு சமூக அமைதி இரு மாநில மக்களுக்கு இடையே நல்லெண்ணம் சகோதரத்துவத்தை நிலை நிறுத்த வேண்டிய இரண்டு மாநில அரசுகளும் இதில் தங்களுக்கான அரசியல் ஆதாயத்தை தேடத் தொடங்கியது.

ஒரு புறம் கர்நாடக மாநில அரசுக்கு தமிழகத்தின் காவிரி வறண்டால் பட்சத்தில் டெல்டா பகுதி விவசாயம் பொய்க்கும். அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் கூடுதலாக தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாறி விவசாயம் செழிக்கும். அப்போது தமிழகம் முழுக்க அரிசி தேவைக்கு அருகில் இருக்கும் கர்நாடக ஆந்திர மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் வரும். இதன் மூலம் கர்நாடகாவில் விவசாயமும் அரிசி உற்பத்தி ஆலைகளும் பெரும் வியாபாரமும் லாபமும் ஈட்ட முடியும் என்ற வியாபார கணக்கில் காவிரி நீரை தமிழகத்திற்கு தரக்கூடாது என்ற நோக்கில் கர்நாடகா அமைப்புகளும் அரசியலும் நகர்ந்தது.

மறுபுறம் தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் வராமல் வறண்டு போனால் மணல் வியாபாரத்திற்கும் குடிநீர் வியாபாரம் நதிநீர் பங்கிட்டு அரசியல் என்ற பெயரில் மாநில பிரிவினைவாதத்திற்கும் தனி தமிழ்நாடு கோரிக்கைக்கும் இந்த காவிரி விவகாரம் பெறும் உதவியாக இருந்தது . மேலும் கன்னட தமிழர் பிரிவினை இதை வைத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை மடைமாற்றும் சூழ்ச்சி அரசியல். அண்டை மாநிலங்கள் எல்லாவற்றிலும் இருந்து தமிழகத்தை தனிமைப்படுத்தும் விதமான திட்டமிட்ட பிரிவினைவாதம் எல்லாம் சேர்ந்து காவிரி நீரை அவர்கள் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தின் மாநில அரசியலை நகர்த்தியது.

இடையில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் அதே காங்கிரஸ் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்த போதும் இந்த காவிரி அரசியலை வைத்து முழுமையான அரசியல் ஆதாயம் அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல்களில் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு வாக்களிக்காத தமிழக மக்களுக்கு கர்நாடகாவின் காவிரி நீரும் முல்லைப் பெரியாறு நீரும் நிலக்கரி மின்சாரம் உள்ளிட்டவை எதுவுமே கிடைக்க விடாமல் செய்வது திமுகவும் கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி அரசும் தான் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பகிரங்கமாக பொது வெளியிலேயே குற்றச்சாட்டு வைத்தார். அந்த அளவில்தான் தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றே குறியாக கர்நாடகாவின் மாநில அரசும் தேசிய அளவில் இருந்த கூட்டணி அரசுகளும் கூட்டாக செயல்பட்டது.

அடுத்து வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பெரும் பிரயத்தனம் செய்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி உச்ச நீதிமன்றத்திற்கான நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தியது. அந்த நடுவர் மன்ற தீர்ப்பையும் அரசு இதழில் வெளிவரச் செய்தது. அதன் தொடர்ச்சியான போராட்டங்கள் மத்தியில் 2014 ல் மாறி வந்த மத்திய அரசு கர்நாடகாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இவை எல்லாமே ஓரளவுக்கு சுமூகமாக தமிழகத்தின் நலனுக்கு ஒத்து வந்தது. அதன் விளைவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த காவிரி மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதல் படி மழை வரத்து அணைகளில் இருக்கும் நீர் இருப்பு இரண்டு மாநிலங்களுக்குமான நீர் தேவை இதை அடிப்படையாக வைத்து நதிநீரை பங்கிட்டு கொள்ள வேண்டும். அதை தவிர்த்து இரு மாநிலங்களுக்குள் தேவையில்லாத சர்ச்சைகள் குழப்பங்கள் வழக்குகள் என்பதன் மூலம் நீதிமன்றத்தை அலைக்கழிப்பு உள்ளிட்டவைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெளிவான வழிமுறைகளை சுட்டிக்காட்டி விதிகளும் வகுக்கப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளில் காவேரி நதிநீர் விவகாரம் நிரந்தர தீர்வை எட்டியது. பல ஆண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு கேட்கும் முன்பாகவே கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்து விடும் . கடைமடை வரையில் காவிரி நீர் போய் சேரும் . காவிரி நதிநீர் என்பது ஒரு பிரச்சனை .அது அரசியல் சிக்கல் .இரு மாநிலங்களுக்கிடையேயான பிரிவினை அரசியல் என்பதெல்லாம் கிட்டத்தட்ட இரு மாநில மக்களுக்கும் மறந்தே போனது. பிரச்சனைகளை மறந்து போன மக்கள் தங்களின் கடந்த கால பிரச்சனைகளுக்கு காரணமானவர்களையும் மறந்து போய் தேர்தல்களில் மீண்டும் அவர்களுக்கு வாக்களித்ததன் பலனை இன்று இரண்டு மாநில மக்களும் மீண்டும் அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்கள். மீண்டும் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறியதில் பழையபடி காட்சிகள் மாறுகின்றன. அதை தொடர்ந்து காவிரி அரசியலும் பழையபடி பிரிவினைவாத அரசியலாக மாநிலங்களுக்கிடையே விரோதம் வளர்க்கும் அரசியல் சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது.

தமிழகத்தின் ஆளும் கட்சிக்கு நெருக்கமான குடும்ப நிறுவனத்தின் பல்வேறு தொலைக்காட்சிகள் அலைவரிசைகள் கர்நாடக மாநிலத்தில் உண்டு. அவர்களின் நெருக்கமானவர்களின் தொழில் வியாபார கட்சி நிர்வாகிகளின் வர்த்தக நிறுவனங்கள் கர்நாடகாவில் ஏராளம் உண்டு. இவற்றையெல்லாம் மனதில் வைத்தே கர்நாடக அரசோடு காவிரி விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கிறது என்ற குற்றச்சாட்டும் இவர்களின் மீது பல காலமாக உண்டு. அதை மெய்ப்பிக்கும்படியாக தமிழகத்தில் இருக்கும் தொலைக்காட்சிகள் எல்லாம் மத்திய அரசு வஞ்சிக்கிறது .கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் வரத்து இல்லை என்று இங்கே அலறும். அதே செய்தி தொலைக்காட்சிகளில் அலைவரிசைகள் கர்நாடக மாநிலத்தில் தமிழகம் தேவை இன்றி நதிநீர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது. கர்நாடகாவில் நீர் இருப்பு கர்நாடகாவின் தேவைக்கு போதாது என்ற நிலையில் மற்ற மாநிலங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியம்? என்று விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தது. அந்த வகையில் இந்த காவிரி நீர் விவகாரம் இரண்டு மாநிலத்திலும் சூழ்ச்சி அரசியலுக்கும் மக்களை மத்திய அரசுக்கு எதிராக மடைமாற்றி பிரிவினை அரசியலுக்கு ஆதரவு திரட்டும் கருத்துகளுக்கு மட்டுமே திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டது.

பல ஆண்டுகால தொடர்ச்சியான பதற்றம். ஒவ்வொரு ஆண்டும் இந்த காவிரி நதிநீர் விவகாரம் அதன் மூலம் வரும் அரசியல் சிக்கல் என்று பெரும் துன்பங்களை இரு மாநில மக்களும் கடந்து வந்தார்கள். குறிப்பாக கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் . தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் நிலை அவர்களின் மன உளைச்சல் வார்த்தையில் சொல்லி மாளாது. ஆனால் அவர்கள் கடந்து வந்த அத்தனை சிக்கலையும் கண் முன்னே பார்த்த மக்கள் இன்று அனைத்தையும் மறந்து சில நூறுகளுக்கும் இலவசங்களுக்கும் தங்களின் வாக்குகளை இரண்டு மாநிலங்களிலும் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாரி வழங்கினார்கள். அதன் பலன் இன்று மீண்டும் காவிரி அரசியல் இரண்டு மாநில மக்களையும் பிரித்தாள தயாராகிறது .அரசியல் களத்தில் காவிரி அனல் தகிக்கும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் கொடுத்த வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டது. அதன் காரணமாக அணைகளில் நீர் இருப்பு இல்லை. அதனால் கர்நாடகாவிலேயே குறைந்தபட்ச நீர் இருப்பு தான் இருக்கும். காரணம் அவர்களால் அணைகளில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை என்று தங்களின் தரப்பில் உறுதியாக நிற்கிறது. கர்நாடக மாநிலம் அந்த வகையில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமோ அல்லது உச்ச நீதிமன்றமோ கர்நாடகத்திற்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முயன்றால் அது கர்நாடகாவின் நியாயத்தை அவர்களின் நலனை புறக்கணிப்பதாகவே அர்த்தம் . அதே நேரத்தில் தமிழகத்தின் நீர் தேவை அத்தியாவசியமாகிறது. அந்த வகையில் தமிழகம் தண்ணீர் வேண்டும் என்று வேண்டுகோளுடன் நிற்கிறது.

கர்நாடகாவில் இருக்கும் கன்னட அமைப்புகள் தமிழக திமுக கட்சிக்கும் இங்கு காவிரி நீர் வேண்டி கோரிக்கை விடுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் முழு அடைப்பை மேற்கொண்டது. இன்றைய தினம் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பை மேற்கொள்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவிற்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம் என்று தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி அதன் சம்பந்தமான ஒரு நேரடி நிகழ்ச்சிக்கு பங்கேற்கச் சென்ற ஒரு நடிகரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அந்த அளவில் கர்நாடகாவில் தமிழக விரோதமும் தமிழர் விரோதமும் தலைவிரித்து ஆடுகிறது. இதை தடுத்து நிறுத்தி பதற்றத்தை நீக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டிய கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசு எரியும் கொள்ளையில் எண்ணெயை ஊற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு கர்நாடக மாநிலம் முழுவதிலும் தமிழகம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தின் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்களின் உருவப்படங்களை எரிப்பது அவமதிப்பது என்று மேலும் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐ என் டிஐ ஏ கூட்டணியில் திமுக போல் காங்கிரசும் ஒரு அங்கம். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைப்பு தான் ஐஎன்டிஐஏ. அந்த வகையில் தேசிய காங்கிரஸ் கட்சி தலைமையிடம் பேசி காவிரி நீர் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வை எட்ட ஒரு நாள் அதிகம் போதுமானது தமிழகத்தின் ஆளும் கட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும். ஆனால் அவர்கள் அதை செய்ய தயாராக இல்லை .கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க குழுவாக பயணித்தது போல் தற்போதும் கூட்டணி கட்சிகள் ஒரு குழுவாக பயணித்து தமிழகத்தில் இருக்கும் நிலைமை அரசியல் நிலைமை இதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லி மாநிலத்திற்கு தேவையான நீரை குறைந்தபட்சமாவது கேட்டு வாங்க அவர்களால் முடியும். ஆனால் அதற்கும் அவர்களின் தன்மானமும் சுய கௌரவமும் இடம் கொடுக்கவில்லை. மாறாக தமிழகம் முழுவதிலும் மத்திய அரசு வஞ்சிக்கிறது. காவிரி நதிநீர் மேலாண்மை கை விரித்து விட்டது. காவிரி நதி நீர் சிக்கலுக்கு ஒரே தீர்வு தனி தமிழ்நாடு கோரிக்கை தான் என்று திரும்பிய பக்கமெல்லாம் கட்சிக்காரர்களை வைத்து மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஆங்காங்கே கர்நாடக மாநில அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகிறது ..அந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கர்நாடக காங்கிரஸ் முதல்வரின் உருவப் படங்கள் எரிக்கப்பட்டும் அவமதிக்கப்பட்டும் வருகிறது.

இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறதுகடந்த காலங்களில் இரண்டு மாநிலத்திலும் இருந்த இதே ஆட்சியாளர்கள் காவிரி நதிநீர் விவகாரத்தை சுமுக கையாளவும் தயாராக இருக்கவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில் இரு மாநில மக்களும் விவசாயிகளும் நலன் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர்கள் நகர்வை முன்னெடுத்ததில்லை. மாறாக இதை முன்வைத்து இரண்டு மாநிலத்திலும் எப்படி அரசியல் செய்யலாம்? மக்களிடையே பிரிவினை விரோதத்தை எப்படி வளர்க்கலாம் ? என்று திட்டம் போட்டு செயல்பட்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் பெரும் அச்சுறுத்தலுக்கும் இழப்புக்களுக்கும் இரு மாநில மக்களும் கடந்த காலங்களில் ஆளாகியிருக்கிறார்கள்.

இடையில் சில காலம் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி மாறியிருந்தது. மத்தியிலும் ஆட்சி மாறியது. பல்வேறு வட மாநிலங்களில் நிகழும் நதிநீர் பங்கீடு விவகாரத்தை எப்படி உச்ச நீதிமன்றம் மேலாண்மை வாரியங்கள் அமைத்து சுமூகமான தீர்ப்புக்கு வழிகாட்டியதோ ? அதே வகையில் காவிரி நதிநீர் பங்கிட்டு இருக்கும் மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுத்தது .இங்குள்ள அதிமுக கட்சியும் அதன் செயல்பாடுகளும் நிர்வாகம் கொள்கை அப்பாற்பட்டு இரண்டு மாநில மக்களின் நலன் பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை பிரிவினை வாதத்திற்கு இடம் கொடுக்காத பொறுப்புணர்வோடு நடந்து கொண்டது. அதன் காரணமாக காவிரி விவகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொண்டது.

ஆனால் அடிப்படை சித்தாந்தமே மொழிவாதம் இனவாதம் பிரிவினைவாதம் என்று அமைக்கப்பட்ட திமுக கட்சி. பிரிவினைவாதிகளையும் இன மொழிவாதிகளையும் கண்டுகொள்ளாமல் வளர்த்து விட்ட வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சியும் கூட்டணி போட்டு காவிரி நதி நீர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது. அதன் விளைவு இரண்டு மாநில மக்கள் பதற்றத்தின் உச்சியில் நிற்கிறார்கள் . இரண்டு மாநிலங்களில் இருக்கும் கர்நாடக தமிழ் மக்கள் எந்த நேரம் என்ன நடக்குமோ? எப்படிப்பட்ட இழப்புகளை சந்திக்க நேரிடுமோ? என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார்கள். ஆனால் மக்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாக சட்டம் ஒழுங்கு பொது அமைதியை நிலை நிறுத்த வேண்டிய மாநில அரசுகள் மாற்று மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டும் மத்திய அரசு மீதும் வசைப்பாடியும் நாளை கடத்தி வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் இருக்கும் உள்ளூர் சமூக விரோதிகள் முதல் மொழி இனவாத அமைப்புகள் என்ற பெயரில் பிரிவினை பாதையை வளர்க்கும் தேசவிரோதிகள் வரை அனைவரும் இந்த காவிரி விவகாரத்தை வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டு மாநில மக்களும் என்ன செய்வது ?தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்காமல் கடந்து போவது ?என்று புரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள்.


Share it if you like it