6 முஸ்லீம் நாடுகள் மீது குண்டு போட்டது மறந்து போச்சா? ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

6 முஸ்லீம் நாடுகள் மீது குண்டு போட்டது மறந்து போச்சா? ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

Share it if you like it

இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்து மோடியிடம் பேசியிருப்பேன் என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு, 6 முஸ்லீம் நாடுகள் மீது குண்டு போட்டது மறந்து விட்டதுபோல் தெரிகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாரத பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்து சில விரும்பத்தகாத சக்திகள் வாகனங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்வதாகவும், இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாவும் ஒருவர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும், இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, மதம், ஜாதி அடிப்படையில் இந்தியாவில் எந்த பாகுபாடும் கிடையாது. அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஒபாமா, “இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்னை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” என்று கூறியிருந்தார். இதற்குத்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அனைவரும் முயற்சி செய்வோம் என்ற கொள்கையுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு சமுதாயத்துக்கு எதிராகவும் பாகுபாடு காட்டவில்லை” என்றார்.

ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுபோல கருத்துத் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இக்கருத்து கண்டிக்கத்தக்கது. அதோடு, அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை ஒபாமா மறந்து விட்டார் போல் தெரிகிறது. அதேசமயம், பாரத பிரதமர் மோடிக்கு 13 வெளிநாடுகள் விருது வழங்கி இருக்கின்றன. இவற்றில் 6 இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it