பெட்ரோல், டீசல் விலை: குறைத்தது மத்திய அரசு… குறைக்குமா தி.மு.க. அரசு!

பெட்ரோல், டீசல் விலை: குறைத்தது மத்திய அரசு… குறைக்குமா தி.மு.க. அரசு!

Share it if you like it

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. அறிவித்தப்படி விலையை குறைக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கேற்ப, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 5 முறை உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, கடந்தாண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் உற்பத்தி வரியை குறைத்தது மத்திய அரசு. அப்போதே, மாநில அரசுகளும் உள்ளூர் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே வரி குறைப்பு செய்யப்பட்டதே தவிர, இதர மாநிலங்களில் வரி குறைப்பு செய்யப்படவில்லை. இதனால், தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கான, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தது. எனினும், இதன் பிறகு சுமார் 5 மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, பெட்ரோல் விலை 110 ரூபாயைத் தாண்டியும், டீசல் விலை 106 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டன. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில்தான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி, பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி  லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்.

இது ஒருபுறம் இருக்க, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், இதுவரை அந்த விலை குறைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதேசமயம், மத்திய அரசோ, எந்த வாக்குறுதியும் கொடுக்காததோடு, எந்த நிர்ப்பந்தமும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறிவித்திருக்கிறது. ஆகவே, தி.மு.க.வும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமா என்று மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Share it if you like it