வெளியே அரிசி ஆலை… உள்ளே போலி மதுபான ஆலை: கைதான தி.மு.க. நிர்வாகியின் தில்லாலங்கடி!

வெளியே அரிசி ஆலை… உள்ளே போலி மதுபான ஆலை: கைதான தி.மு.க. நிர்வாகியின் தில்லாலங்கடி!

Share it if you like it

செங்கல்பட்டு அருகே அரிசி ஆலைக்குள் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்த தி.மு.க. நிர்வாகியை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. நிர்வாகிகள் பலரும் சட்டத்துக்கு புறம்பான பல்வேறு வேலைகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பது என பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் பாக்ஸிங் போடுவது, பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணை எட்டி எட்டி உதைத்து என தி.மு.க.வினர் செய்த அட்டகாசங்களும் அதிகம். இந்த சூழலில்தான், போலி மதுபான தொழிற்சாலை நடத்தி கைது செய்யப்பட்டிருக்கிறார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அச்சரப்பாக்கம் அருகே உள்ள வடமணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. தி.மு.க. ஒன்றிய தொண்டர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர், வடமணிபாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருக்கிறார். இந்த சூழலில், கொங்கரை கிராமத்தில் ஒரத்தி – திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை வடிவேலு லீஸுக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 5-ம் தேதி இரவு அந்த அரிசி ஆலையில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரிசி ஆலைக்குள் போலி மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அங்கு, விற்பனைக்குத் தயாராக இருந்த 5,000 போலி மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபானம் தயாரிப்பதற்காக, 212 கேன்களில் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட், 20,000 காலி மதுபான பாட்டில்கள், 11,000 மதுபான பாட்டில் மூடிகள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் இயந்திரங்கள், போலி ஸ்டிக்கர்கள், மதுபான கடத்துலுக்கு பயன்படுத்தப்பட்ட எய்சர் வேன் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து, வடிவேலுவையும், அவருக்கு உடந்தையாக இருந்த முருகனையும் போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, போலி மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்ட மது பாட்டில்களை, வடிவேலு டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அரசு மதுபானக் கடைகளில் ஆய்வு நடத்த போலீஸாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் திட்டமிட்டிருக்கிறார்கள். தவிர, போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வடிவேலு மீது, ஏற்கெனவே நாட்டுவெடிகுண்டு தயாரிப்பு, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தலை தடுத்த போலீஸார் மீது டிராக்டர் மோதி கொலை செய்ய முயன்றது, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it