அமைச்சர் வருவதால் மாஸ் காட்டுவதற்காக, தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர், கிராமசபை கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டிய தில்லாலங்கடி அம்பலமாகி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது வேங்கைவாசல் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயச்சந்திரன். குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த கிராமசபை கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் களைகட்டியது. சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். வழக்கமாக கிராமசபைக் கூட்டத்தில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ளும் நிலையில், இக்கூட்டத்தில் 300 பேர் கலந்துகொண்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஒ்ரு வழியாக கிராமசபைக் கூட்டமும் முடிந்தது. ஆனால், கூட்டம் மட்டும் கலையவில்லை. இதனால், ஏன் என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதனிடையே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிளம்பிச் சென்றார். அவ்வளவுதான் கூட்டத்தில் பெரும் சலசலப்பு. இனிப்பைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதுபோல, ஒரு நபரை நோக்கி மக்கள் சாரைசாரையாக அணிவகுத்துச் சென்றனர். என்ன மேட்டர் என்று அருகில் சென்று பார்த்தால், அனைவருக்கும் பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருநத்து. என்ன சமாச்சாரம் என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தோம். அப்போதுதான், ஊராட்சி மன்றத் தலைவரின் குட்டு அம்பலமானது.
அதாவது, கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள வருகிறார் என்றதும் பரபரப்படைந்திருக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன். உடனே, கூட்டத்தில் ஏராளமான மக்களை திரட்டி மாஸ் காட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். எனவே, வேங்கைவாசல் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அமைச்சர் வருவதால் அனைவரும் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அப்படி கலந்துகொண்டால் தலைக்கு 200 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதனால்தான் கிராமசபை கூட்டத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி இருக்கிறது என்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.