ஆட்டுவிக்கும் தி.மு.க.வினர்… கதறும் வி.சி.க. கவுன்சிலர்!

ஆட்டுவிக்கும் தி.மு.க.வினர்… கதறும் வி.சி.க. கவுன்சிலர்!

Share it if you like it

கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரை தி.மு.க.வினர் ஆட்டிப்படைப்பதால், ஆள விடுங்க சாமி, நான் ராஜினாமா பண்ணிட்டு போயிடுறேன் என்று கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 வார்டுகள் இருக்கின்றன. இதில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர். தொடர்ந்து நடந்த தலைவர் தேர்தலில் சுயேட்சைகளின் ஆதரவு மற்றும் தி.மு.க.வினர் கட்சி மாறி வாக்களித்ததாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கீதா கார்த்திகேயன் வெற்றிபெற்றார். இதனால், தி.மு.க.வினர் கடும் அதிருப்தியடைந்தனர். ஆகவே, ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கூட்டம் நடக்கும் போதெல்லாம், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் கையெழுத்து போடாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இம்மாதத்துக்கான கூட்டம் கடந்த சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்திலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து சுயேட்சைகள் உட்பட 11 பேர் கையெழுத்திட்டனர். ஆனால், வழக்கம்போல தி.மு.க. கவுன்சிலர்கள் கையெழுத்திடாமல் புறக்கணித்தனர். இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியைச் சேர்ந்த 21-வது வார்டு கவுன்சிலர் அன்புச்செல்வன், தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகச் சென்றார். இதையறிந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், அன்புச்செல்வன் மீது ஆத்திரமடைந்தனர். நாங்கள் பார்த்து வெற்றிபெற வைத்த நீ எப்படி எங்களை மீறி கையெழுத்திடலாம் என்று கூறி, அவரை கையெழுத்துப் போட விடாமல் வாக்குவாதம் செய்தனர்.

இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அன்புச்செல்வனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால், அப்செட்டான அன்புச்செல்வன், அண்ணே எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் எனது பதவியை ராஜினாமா பண்ணிடுறேன். நீங்க யார வேணுமுன்னாலும் கவுன்சிலராக்கிக்கோங்க என்று மனமுடைந்து கதறினார். இச்சம்பவங்கள் முழுவதையும் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் தி.மு.க.வினரின் அராஜக செயலை கண்டித்து வருகின்றனர். இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சியினரை தி.மு.க.வினர் இப்படித்தான் ஆட்டிப்படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it