ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. மாஜி அமைச்சர் சகோதரர் மீது புகார்!

ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. மாஜி அமைச்சர் சகோதரர் மீது புகார்!

Share it if you like it

சென்னையில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர், அபகரித்து விட்டதாக ஓய்வுபெற்ற தாசில்தார் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தாசில்தார் திருநாவுக்கரசு. இவருக்குச் சொந்தமான சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் நிலம் கொரட்டூர் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தைத்தான், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் அபகரித்துக் கொண்டு மிரட்டுவதாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் திருநாவுக்கரசு. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசு, “எனக்குச் சொந்தமான 14.5 ஏக்கர் நிலம் சென்னை கொரட்டூரில் உள்ளது. இந்த நிலத்தை 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாகக் கூறி தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் என்னை தொடர்புகொண்டு கேட்டார்.

பின்னர், முன்பணமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து ‘பவர் ஆஃப் அட்டார்னி’ வாங்கிக் கொண்டார். ஆனால், மீதமுள்ள தொகையை தராமல் என்னை ஏமாற்றி வந்தார். இதனிடையே, பொய்யான ஆவணங்களை தயார் செய்து, என்னுடைய 14.5 ஏக்கர் நிலத்தை தேவராஜ் அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். இதன் பேரில், விசாரணை செய்து தேவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இதன் பிறகு, ஜாமீனில் வெளியே வந்த தேவராஜ், தன் மீது பதியப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் மூலம் ரத்து செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறேன். இந்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தேவராஜ் தூண்டுதலின் பேரில் நேற்று முன்தினம் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து, ‘இந்த இடம் தேவராஜூக்குச் சொந்தமான இடம்’ என்று கூறி, எங்களது இடத்தின் காவலாளியை மிரட்டி அடித்து துரத்தி விட்டார். மேலும், நிலத்தை தேவராஜ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிரச்னை செய்தால் கைது செய்து விடுவேன் என்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மிரட்டி விட்டுச் சென்றார். எனவே, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தேவராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


Share it if you like it