சென்னை அடையாறு பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்து, அடுத்தடுத்து 5 வாகனங்களில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் கீழே, சிக்னல் ஒன்று இருக்கிறது. இதன் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் திடீரென புகை கிளம்பி தீப்பிடித்து எரிந்தது. காரிலிருந்து பரவிய தீயானது பாலத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இரு சக்கர வாகனங்களிலும் பரவி மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், மயிலாப்பூர் மற்றும் அடையார் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும், இத்தீவிபத்தில் 1 கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. கார் தீப்பிடித்ததும் அதிலிருந்த டிரைவர் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, காரில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? வாகன உரிமையாளர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.