மேட்ரிமோனியில் முதிர்கன்னிகள், விவாகரத்தானவர்கள் மற்றும் விதவை பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த முகமது உபேஸ் என்கிற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூரை அடுத்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் முகமது உபேஸ். 37 வயதாகும் இவன், எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறான். இதனால், வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்தவனுக்கு திடீரென ஒரு யோசனை உதித்திருக்கிறது. அதாவது, இவன் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவன் என்பதால், முஸ்லீம்களுக்கான மேட்னிமோனியல் வெப்சைட்டில் திருமணத்துக்கு வரன் தேடுவதுபோல பதிவு செய்து வைத்தான். பின்னர், திருமணத்திற்கு வரன் தேடும் முஸ்லீம் பெண்களில் முதிர் கன்னிகள், விவாகரத்தானவர்கள் மற்றும் விதவை பெண்களை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறுவான். இதை நம்பி அப்பெண்கள், நகை, பணத்தை கொண்டுவந்து முகமது உபேஸிடம் கொடுப்பார்கள். அதன் பிறகு, உபேஸ் எஸ்கேப்பாகி விடுவான். இப்படி மதுரை, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பெண்களிடம் மோசடி செய்திருக்கிறான். ஆனால், போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாகவே இருந்து வந்தான்.
இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த, சுமார் 25 வயதுடைய இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், “கடந்த 2017-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே விவாகரத்தாகி விட்டது. இதனால், தனியார் முஸ்லிம் மேட்ரிமோனியில் 2-வது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தேன். இந்த சூழலில், முகமது உபேஸ் என்ற நபர் மேட்ரிமோனி மூலம் என்னை தொடர்பு கொண்டார். இருவரும் போனில் பேசி பழக்கி வந்தேன். 10 நாட்களுக்குப் பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த முகமது உபேஸ், திருமண ஏற்பாடுகளை செய்ய பணம் தேவை என்று சொல்லி, என்னை சென்னை ராயப்பேட்டை பகுதிக்கு வருமாறு அழைத்தார். நானும், 50 சவரன் நகைகளுடன் ராயப்பேட்டையிலுள்ள தனியார் மாலுக்குச் சென்றேன்.
அப்போது, என்னிடமிருந்த நகைகளை கேட்ட முகமது உபேஸ், திருமண செலவிற்காக நகைகளை விற்று பணம் வாங்கி வருவதாக கூறினார். நானும் நம்பி எனது நகைகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தேன். நீண்ட நேரம் மாலில் காத்திருந்தும் உபேஸ் வரவில்லை. எனவே, அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். ஆனால், அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதன் பிறகுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். ஆகவே, முகமது உபேஸ் மீது நடவடிக்கை எடுத்து, எனது நகைகளை மீட்டுத் தரவேண்டும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட மாலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் முகமது உபேஸ் செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்தனர். மேலும், ஏற்கெனவே இருக்கும் குற்றவாளிகளின் பட்டியலிலும், சந்தேகப்படும் நபர்களின் பட்டியலிலும் முகமது உபேஸ் போட்டோ இருக்கிறது என்று ஆய்வு செய்தனர். ஆனால், எதிலும் அவரது புகைப்படம் இல்லாததால், முகமது உபேஸை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாக இருந்தது.
சுமார் ஒரு மாத காலமாக நடத்திய தொடர் விசாரணையில், முகமது உபேஸ் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று ஈரோடு சென்ற அண்ணாசாலை போலீஸார், அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த முகமது உபேஸை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உபேஸிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், இரு சக்கர வாகனம், பெண்ணிடம் இருந்து திருடிச் சென்ற நகையில் ஒரு பகுதி, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பிறகு, முகமது உபேஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.