செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்த டி.ஐ.ஜி.!

செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்த டி.ஐ.ஜி.!

Share it if you like it

புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் விசாரணை கைதியாக இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை, டி.ஐ.ஜி. ஒருவர் சிறை விதிகளை மீறி அடிக்கடி சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ம் தேதி அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எனினும், நெஞ்சுவலி காரணமாக, ஓமாந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சை நிறைவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் வகுப்பு கைதி என்பதால், அவருக்கு வேண்டிய வசதிகள் மற்றும் விரும்பிய உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், தமிழகத்தைச் சேர்ந்த டி.ஐ.ஜி. ஒருவர், செந்தில்பாலாஜியை சிறையில் அடிக்கடி சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் இருப்பது விதிகளுக்கு எதிரானது. மீறுவோர் மீது நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வகையில், கடலுார் மத்திய சிறையில் எண்ணுார் தனசேகரன் என்கிற ரவுடியுடன் காவலர் ஒருவர் அருகில் நின்று காதோடு பேசியதற்காக நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்.

அதேபோல, துாக்கு தண்டனை கைதி ஆட்டோ சங்கரை டி.ஐ.ஜி. ஒருவர், வாரத்திற்கு 12 முறை சந்தித்தது நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனது. இந்த சூழலில், தற்போது புழல் மத்திய சிறை வளாகத்தில் குடும்பத்தினருடன் வசித்து வரும் டி.ஐ.ஜி. ஒருவர் விதிகளை மீறி செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு முன்பு அவர் சிறை வளாகத்திற்கு வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்ததாகவும், தற்போது செந்தில்பாலாஜி தங்கியுள்ள மருத்துவமனை அருகே நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடைப்பயிற்சி செல்லும் உடையுடன் சென்று செந்தில்பாலாஜியை நலம் விசாரித்து, குறைகள் ஏதும் உள்ளதா, உணவு தரமாக இருக்கிறா என்று கேட்டுச் செல்கிறாராம். புழல் மத்திய சிறையில் 3,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கும் நிலையில், மற்ற கைதிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்காத டி.ஐ.ஜி., செந்தில்பாலாஜியை மட்டும் சந்திப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே, இது செந்தில்பாலாஜியை டி.ஐ.ஜி. சந்திக்கிறாரா அல்லது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it