பெண்கள் முன்னேற்றத்துக்காவும், நாட்டுக்கு சேவையாற்றவும் பா.ஜ.க.வில் இணைய முடிவு செய்திருக்கிறேன் என்று திரைப்பட்ட காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக தாடி பாலாஜியும், நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யா சென்னை மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி வசித்து வருகிறார். நித்யாவுக்கும், மணிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், மணியின் காரை நித்யா கற்கள் வீசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நித்யா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி, தன்னை அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்க நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் நித்யா. அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒரு பெண்ணால் எல்லாத் துறையிலும் சாதிக்க முடியும். என்னதான் சிங்கிள் பெண்ணாக இருந்து போராடினாலும், நமக்கு பின்னாடி நிறைய தலைப்புகள் வைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்கிறது. நீ எந்த மாதிரி தொழில் செய்கிறாய் என்றெல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் எல்லாம் நேர்மையாக, உண்மையாக சம்பாதிக்க மாட்டோமா… ஏதாவது தப்பான வழியில போய்தான் சம்பாதிக்க வேண்டுமா?
தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு நடந்த மாதிரி மற்ற பெண்களுக்கு நடக்கக்கூடாது. அரசியலில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அரசியலில் வந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். ஆகவே, பெண்கள் முன்னேற்றத்துக்காவும், நாட்டுக்கு சேவையாற்றவும் நான் பா.ஜ.க.வில் இணைய முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.