‘ஜால்ரா’ அமைச்சர்… தி.மு.க. எம்.பி. நக்கல்!

‘ஜால்ரா’ அமைச்சர்… தி.மு.க. எம்.பி. நக்கல்!

Share it if you like it

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை, நல்லா ஜால்ரா போடுவாரு. காரணம், கோயில்ல அடித்து பழக்கம் என்று நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழுத் தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு..க.. ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயிருப்பது ஒருபுறம் இருக்க, கட்சியிலும் உட்கட்சி பூசல் நிறையவே இருந்து வருகிறது. இதை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், மதுரையில் நிலவும் உட்கட்சி மோதல் குறித்து பொது நிகழ்ச்சியிலேயே போட்டு உடைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதேபோல, தி.மு.க.வினர் கடவுள் மறுப்பு மற்றும் ஹிந்து வெறுப்பு என அழைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவோ, கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, சனாதன முறைப்படி எல்லாவற்றையும் செய்து வருகிறார். இது தி.மு.க.வில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் சேகர்பாபுவை பலரும் குத்திக்காட்டி பேசிவருகின்றனர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் சேகர்பாபு கவலைப்படுவதே இல்லை.

உதாரணமாக, ஹிந்து பண்டிகைகளுக்கு தி.மு.க. தலைவர் உட்பட யாருமே வாழ்த்துச் சொல்வதில்லை. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்கிற முறையிலும், தீவிர கடவுள் பக்தர் என்கிற வகையிலும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்லி இருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இதனால், ஆவேசமான தர்மபுரி எம்.பி. செந்தில்குமார், தி.மு.க.வில் இருக்கும் அனைவரும் ஒரே கொள்கையோடு இருக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சேகர்பாபுவோ, தனக்கு யாரும் அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிற ரீதியில் பதிலடி கொடுத்திருந்தார். இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் சேகர்பாபு அவமானப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜால்ரா அமைச்சர் என்று அக்கட்சியின் எம்.பி.யாலேயே நக்கல் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை மண்ணடி தம்புசெட்டி தெருவில் சமூகநீதி தத்துவத்தின் தகைமையே என்கிற தலைப்பில் தி.மு.க. சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, டி.ஆர்.பாலு, பர்வீன் சுல்தானா உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர்.பாலு, அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு விஷயத்தை சொன்னால், அதை தலைவர் ஸ்டாலினிடம் கொண்டுபோய் சேர்க்க மாட்டார். நல்லா போட்டுட்டு வந்துடுவார் என்று ஜால்ரா அடிப்படிபோல செய்கை செய்துவிட்டு, கோயிலில் அடித்து அடித்து பழக்கமாகி விட்டது என்றவர், அமைச்சர் சேகர்பாபுவின் முகம் மாறியதும் சமாளித்துக் கொண்டு, இவர் தலைவரே எதிர்த்தே பேசமாட்டார். ரொம்ப நல்லவர். தலைவருக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே பேசுவார் நம்ம அமைச்சர், அது ஒரு கலை என்றும் ஐஸ் வைத்தார். மேலும், நான் தலைவருக்கு பிடிக்காததை பேசி கெட்ட பெயர் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். அந்த விஷயத்தை எனக்கும் சொல்லிக் கொடுங்க என்று நக்கலாக மீண்டும் கூறிவிட்டு, என் நண்பர் அமைச்சர் சேகர்பாபு என்று சொல்லி மீண்டும் ஐஸ் கட்டியை தூக்கி தலையில் வைத்தார்.

ஒரு பொதுவெளியில், அதுவும் தமிழகத்தின் அமைச்சராக இருக்கும் ஒருவரை, சபை நாகரீகமில்லாமல் டி.ஆர்.பாலு இப்படி அவமரியாதையாகப் பேசியது பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தி.மு.க.வின் சுயமரியாதையை கிழித்து தொங்கவிட்டு வருகிறது.


Share it if you like it