சுயநலவாதிகளின் தூண்டுதலால் மீனவர் போராட்டம்: ஐகோர்ட் காட்டம்!

சுயநலவாதிகளின் தூண்டுதலால் மீனவர் போராட்டம்: ஐகோர்ட் காட்டம்!

Share it if you like it

சென்னை நொச்சிக்குப்பத்தில் நடந்துவரும் மீனவர்கள் போராட்டம், சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் நடந்து வருவதாக உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டி இருக்கிறது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை இணைப்பு சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்றும்படியும், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மீன்கடைகள், உணவகங்களை அகற்றிய சென்னை மாநகராட்சி, அறிக்கையும் தாக்கல் செய்தது. அதில், மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவகங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என குறிப்பிட்டிருந்தது.

அதேசமயம், கலங்கரை விளக்கம் அருகே மீன் சந்தை கட்டுமானப் பணிகள் முடியும் வரை, சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நீதிபதிகள், சுயநலவாதிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததோடு, சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று மீனவர்களுக்கும் அறிவுறுத்தும்படி வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர். மேலும், மாநகராட்சியின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.


Share it if you like it