பழுது நீக்க வந்த 50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த ஊழியர் பிரபீர் ஷேக்கை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாம்பலம் பகுதியில் பிரபல நகைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சத்தியநாராயணன். இங்கு சி.ஐ.டி. நகர் 3-வது தெருவைச் சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழலில், இக்கடைக்கு பழுது நீக்க வந்த நகைகளை, பிரபீர் ஷேக் திருடி அடகு வைத்து ஜாலியாக செலவு செய்து வந்திருக்கிறார். இதனிடையே, நகை பழுது நீக்க கொடுத்தவர்கள் வந்து கேட்டிருக்கிறார்கள். உடனே, மேலாளர் சத்தியநாராயணன், ஊழியர்களிடம் நகைகளை எடுத்து வரும்படி சொல்லி இருக்கிறார். அதற்கு, நகைகளை காணவில்லை என்று ஊழியர்கள் வந்து சொல்லி இருக்கிறார்கள்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், ஊழியர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போதுதான், பழுது பார்க்க வந்த நகைகளை எல்லாம் ஊழியர் பிரபீர் ஷேர், நகைக் கடையில் அடகு வைத்து செலவு செய்திருக்கும் விவரம் தெரியவந்தது. இதையடுத்து, மேலாளர் சத்தியநாராயணன் இதுகுறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், “எங்களது நகைக்கடைக்கு பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்த சுமார் 50 பவுன் நகைகளை, எங்கள் கடை ஊழியர் பிரபீர்ஷேக் என்பவர் அடகு வைத்து மோசடி செய்து விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரபீர் ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, பிரபீர் ஷேக், தனது நண்பர் பாலமுருகன் மூலம் மேற்படி நகைகளை அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நகைக்கடை ஊழியர் பிரபீர் ஷேக் மற்றும் பாலமுருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.