சென்னையில் பழுது பார்க்க விட்ட காருக்கு பணம் தராததோடு, மெக்கானிக்கையும் தி.மு.க. குண்டர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், கோயம்பேடு பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் காதர் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருத்தணி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் அவரது மகன் ஆகியோர், ஓடாத நிலையில் இருந்த ஒரு பழைய காரை வாங்கி வந்து, ரிப்பேர் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு, கடை உரிமையாளர் ஜோதி, 1 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு கிருபாகரனும் சம்மதிக்கவே, காரை வேலை பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதுவரை 61,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டு கார் வேலை பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கிருபாகரனிடம் பணத்தைக் கேட்டிருக்கிறார் ஜோதி. ஆனால், கிருபாகரன் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். இந்த சூழலில், தி.மு.க. பிரமுகர் ராகுல் என்பவர் சுமார் 7 பேருடன் வந்து, மெக்கானிக் காதரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், காதரின் தலை மற்றும் முகத்தின் எலும்புகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், காரையும் மாட்டித் தரச் சொல்லி எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனிடையே, தாக்குதலில் பலத்த காயமடைந்த காதர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சி.சி.டி.வி. கேமரா ஆதாரத்தோடு கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்றம் நடப்பதாகக் கூறி, போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் தி.மு.க. பிரமுகர் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்கும் சம்பவம், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.