எதற்காக வந்தோம் என்று தெரியாமலேயே கருணாநிதி பேனா சிலை கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கு பொதுமக்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரீனா கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதற்காக தமிழக அரசு 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்தார். இந்த நினைவுச்சின்னம் கடலுக்குள் அமைவதால், கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறுவது அவசியம். எனவே, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, தேசிய கடலோர மண்டல ஆணையத்திடம் அனுமதி கோரியது. இதற்கு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சுமார் 1,500 பேர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குத்தான் எதற்கு வந்தோம் என்று தெரியாமலேயே மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அதாவது, காலை 10:30-க்கு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பெண்கள் சாரை சாரையாக கூட்டத்துக்கு வந்தனர். கருத்துக்கேட்புக் கூட்டத்துக்கா இவ்வளவு கூட்டம் என்று செய்தியாளர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.
எனவே, ஒரு தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர், மற்றொரு நாளிதழின் செய்தியாளரும் கூட்டத்துக்கு வந்த பெண்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர். நீங்க என்ன கூட்டத்துக்கு வந்திருக்கீங்க என்று செய்தியாளர்கள் கேட்க, அப்பெண்களோ தெரியாது என்று பதிலளித்தனர். மற்றொரு பெண்ணிடம், நீங்க என்ன பேசப்போறீங்க என்று கேட்டதற்கு, எதுவும் பேசப் போறதில்லை என்றார். இன்னொரு மூதாட்டியிடம் கேட்டதற்கு, நான் என்ன கூட்டத்துக்கு வந்திருக்கிறேன், என்ன பேசப்போகிறேன் என்பதெல்லாம் தெரியாது. இந்த இடத்துல கூட்டம் நடக்குது, வந்திருங்கன்னு சொன்னாங்க, வந்தோம் என்று கூறிவிட்டு நடையைக் கட்டினார்.
ஆக, கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட யாருக்குமே எதற்காக வந்தோம் என்பதே தெரியவில்லை. வந்தால் பணம் கொடுப்பதாக கூறப்பட்டதால், அவர்கள் வந்திருந்தது தெரியவந்தது. அதாவது, மக்கள் கூட்டத்தை காட்டுவதற்காகவும், இவர்கள் அனைவரும் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஆதரவாக கருத்துத் தெரிவித்ததாகவும் கணக்குக் காட்டுவதற்காக தி.மு.க.வினரால் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. இதுலையும் பிராடுதானா?