கருணாநிதி நினைவாக பேனாவுக்கு பதில் ஏர்கூலரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் ஷியாக் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு சார்பில் 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், கடல் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கடலோர மண்டல ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆகவே, தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கடலோர ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும்படி ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ.க., பூவுலகின் நண்பர்கள், நாம் தமிழர் சீமான் உட்பட பல்வேறு தரப்பினரும் கடலுக்குள் சிலை வைக்கக் கூடாது என்றே கருத்துத் தெரிவித்தனர். இதற்கு, தி.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து, கூச்சலிட்டும், ரகளையில் ஈடுபட்டும் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தனர். இதனால், கூட்டத்தை ரத்து செய்யுமாறு நாம் தமிழகர் கட்சி சார்பில் கலெக்டரிடம் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. மேலும், தி.மு.க. அரசின் பேனா சிலைக்கு எதிராக கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், அக்கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவருமான ஷியாம் கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் ஷியாம் கிருஷ்ணசாமி, “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். அவரது வாரிசுகளுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கருணாநிதியின் வரலாறு எழுதப்படும்போது, அவரது பேனாவெல்லாம் நினைவுச் சின்னமாக இருக்காது.
தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட மக்களின் ரத்தம்தான் அவரது வரலாறாக இருக்கும். உங்களுக்கு பேனா சிலை எல்லாம் வைக்கக் கூடாது. ஒரு வயது சிறுவன் விக்னேஷை அடித்துக் கொன்றீர்களே, அந்த லத்தியை சிலையாக வையுங்கள். அல்லது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கப்பட்டபோது, ஏர்கூலரை வைத்துக் கொண்டு உண்ணாவிரத நாடகம் போட்டீர்களே, அந்த ஏர்கூலரை வேண்டுமானால் சிலையாக வையுங்கள். ஈழம் இருக்கும்வரை, தாமிரபரணி ஆறு இருக்கும்வரை உங்கள் ரத்தக்கறை போகாது. அந்த வரலாறு பேசிக்கொண்டேதான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.