சென்னையில் அடிப்படை வசதி கோரி, அமைச்சர் உதயநிதியை பொதுமக்கள் முற்றுகையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் மறந்தே விட்டனர். இதனால், பொதுமக்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில், நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அந்தவகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் நினைவிடத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியான டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மூலக்கொத்தளம் இடுகாட்டுக்கு பின்புறத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, தங்கள் பகுதிக்கு கழிப்பிடம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் நெருங்காமல் தடுத்து நிறுத்தி, பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் முற்றுகையிட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.