அமைச்சர் உதயநிதியின் அலட்சியத்தால் விளையாட்டு வீரர்கள் வெயிலில் காய்ந்ததோடு, மாற்றுத் திறனாளி சிலம்பாட்ட வீரரும் ஏமாற்றமடைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு சமீபத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார். உதயநிதி அமைச்சராக இருப்பாதல் தனது தந்தையான முதல்வர் ஸ்டாலின் பெயரில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்தார். அதன்படி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டிகளை நடத்துகிறது.
சென்னையில் இப்போட்டிகளை அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று சிந்தாதிரிப்பேட்டை மே தின நேரு பூங்கா மைதானத்தில் கால்பந்து, கபாடி, இறகுப்பந்து போட்டிகளை காலை 10.00 மணிக்கும், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள கண்ணதாசன் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் செஸ் போட்டிகளை காலை 10.30 மணிக்கும் உதயநிதி துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக, மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கே அழைத்து வரப்பட்டு மேற்கண்ட இரு இடங்களிலும் அமர வைக்கப்பட்டனர். அதேபோல, விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், விளையாட்டு ஆர்வலர்களும் போட்டி நடக்கும் இடத்தில் குவிந்தனர்.
ஆனால், காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வராத உதயநிதி, மிகவும் அலட்சியமாகவும், சாவகாசமாகவும் விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். குறிப்பாக, தி.நகர் நடேசன் பூங்காவிற்கு உதயநிதி வரும்போது மதியம் 12 மணியாகி விட்டது. இதனால், மாணவ, மாணவிகளும், விளையாட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்களும் கடும் வெயிலில் காய்ந்தனர். அதேபோல, மாற்றுத் திறனாளி சிலம்பாட்ட வீரர் ஒருவர், தனது திறமையை உதயநிதியிடம் காட்டுவதற்காக காத்திருந்தார். ஆனால், அந்த மாற்றுத் திறனாளி வீரரையும் உதயநிதி சட்டை செய்யாமல், வந்த வேகத்தில் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், அந்த மாற்றுத்திறனாளி வீரரும் ஏமாற்றமடைந்தார்.