போக்குவரத்து காவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது!

போக்குவரத்து காவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது!

Share it if you like it

சென்னையில் தி.மு.க. பிரமுகர் போக்குவரத்து காவலரை தாக்கி, செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். இவர், அண்ணாநகர் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், முத்துச்செல்வன் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது முதியவர் ஒருவர் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதை கவனித்த முத்துச்செல்வன் தனது இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி முதியவரை எச்சரித்து அங்கிருந்து கிளம்பச் செய்தார்.

மேலும், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது, அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கி வந்த நபர் ஒருவர், காவலர் முத்துச்செல்வனிடம் நீ யார் இதை செய்ய? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இத்தகராறு முற்றிய நிலையில், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது அந்த நபர், போக்குவரத்து காவலர் முத்துச்செல்வனை தாக்கி, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் முத்துச்செல்வன், இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போக்குவரத்து காவலர் முத்துச்செல்வனை தாக்கியது அமைந்தகரையைச் சேர்ந்த கண்ணன் என்பதும், அவர் தி.மு.க.வில் இலக்கியப் பேரவை பிரிவில் நிர்வாகியாக இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், கண்ணனை கைது செய்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. பொது இடத்தில் மக்கள் மத்தியில் போக்குவரத்துக் காவலரை தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே, தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்கள் இருவரிடம், தி.மு.க. பிரமுகர்கள் இருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, போலீஸ்காரர் ஒருவரை தி.மு.க. பிரமுகர்கள் தாக்கியதில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்த சம்பவமும் அரங்கேறியது. தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, போலீஸ்காரர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது இதுபோன்ற சம்பவங்களின் மூலம் தெளிவாகிறது.


Share it if you like it