கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்: ‘யா மொஹிதீன்’ பிரியாணி கடைக்கு ‘சீல்’!

கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்: ‘யா மொஹிதீன்’ பிரியாணி கடைக்கு ‘சீல்’!

Share it if you like it

யா மொஹீதீன் பிரியாணி கடையில் 50 கிலோவுக்கும் மேலான கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிரியாணி கெட்டுப்போயிருந்ததையும் உறுதி செய்து, கடைக்கு 15 நாட்கள் சீல் வைத்தனர்.

அசைவ உணவகமான ‘யா மொய்தீன்’ பிரியாணி கடை சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்ளுக்கு முன்பு விழுப்புரத்தில் தொங்கப்பட்ட யா மொஹிதீன் பிரியாணி கடை கிளையில் கெட்டுப்போன நாட்டுக்கோழி பிரியாணி வழங்கப்பட்டதாக வக்கீல்கள் சிலர் பிரச்னை செய்ததும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அக்கடையில் ரெய்டு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கெட்டுப்போன பிரியாணி பரிமாறப்பட்டதை உறுதிசெய்து கடைக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த திருமுருகன் என்கிற மாணவர், பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த கையோடு, கடந்த மாதம் 24-ம் தேதி அங்குள்ள 5 ஸ்டார் என்கிற கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டிருக்கிறார். அன்றைய தினம் இரவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். ஏற்கெனவே, சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது தந்தூரி சிக்கனும் சிக்கலை ஏற்படுத்தியதால் அசைவ உணவு வகைகளே ஆபத்தானதுதானோ என்கிற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இதையடுத்து, அசைவ உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை வடபழனி 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் யா மொஹிதீன் பிரியாணி கடையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை சென்னை நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த உணவகத்தில் இருந்து 50 கிலோவுக்கும் மேலான கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, உணவகத்தின் சமையல் அறை 15 நாட்கள் செயல்படக் கூடாது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், இத்தவறை மீண்டும் செய்தால் உணவகத்திற்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கெட்டுப் போன இறைச்சிகளை சமையலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறி யா மொஹிதீன் கடைக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.


Share it if you like it