செஸபில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸென்னை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்த ஆண்டில் கார்ல்ஸென்னை இரண்டாவது முறையாக வீழ்த்தி இருக்கிறார் பிரக்ஞானந்தா.
சென்னையைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா (16). செஸ் வீரரான இவர், இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று விருதுகளை வாங்கி இருக்கும் இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்குபெற்றார். அப்போது, நார்வேயைச் சேர்ந்த கார்ல்ஸென்னை வீழ்த்தினார். இவர்தான், சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீரர். யாராலும் வெற்றிபெற முடியாத, தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தவர். அப்படிப்பட்ட கார்ல்ஸென்னை, பிரக்ஞானந்தா வீழ்த்தியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், செஸபில் மாஸ்டர்ஸ் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடந்து வருகிறது. எதிர்வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், நேற்று கார்ல்ஸென்னுடன் மோதினார் பிரக்ஞானந்தா. இப்போட்டியிலும் கார்ல்ஸென்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இவரது 40-வது காய் நகர்த்தலின்போது ஆட்டம் டிராவில் முடிவதாக இருந்தது. ஆனால், கார்ல்ஸென் தவறாக காயை நகர்த்தி விட்டார். இதன் காரணமாக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். எனினும், 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில்தான் இருக்கிறார் பிரக்ஞானந்தா. அதேசமயம், கார்ல்ஸென் 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். சீன வீரர் வெய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தாவுக்கு இந்த வாரம் தேர்வுகள் நடக்கவிருக்கிறது. எனினும், இந்த விளையாட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதற்காக பிரக்ஞானந்தா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.