அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளையும் உளவு பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் சீனாவின் வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன் ஒன்று பறந்தது. இது தங்களது நாட்டை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய பலூன் என்று சீனா குற்றம்சாட்டியது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வான் பகுதியில் சீன பலூன் ஒன்று பறந்தது. அப்பலூன் வானிலையை ஆய்வு செய்ய பறக்க விடப்பட்டதாகவும், அதிக காற்றின் காரணமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்தது. எனினும், மேற்கண்ட பலூன் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகில் பறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
மேலும், அந்த பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இருந்ததால், அப்பலூன் உளவு பார்க்க அனுப்பப்பட்டதாக இருக்குமோ? என்கிற சந்தேகம் அமெரிக்காவுக்கு எழுந்தது. அடுத்த சில தினங்களால், இரண்டாவதாக மற்றொரு பலூனும் தென்பட்டது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரிதும் வைரலானது. இது சீன தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா கொக்கரித்தது.
ஆனால், அமெரிக்கா எதைப் பற்றியும் கவலைப்படாமல், சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை மீட்க கடற்படையை அனுப்பியது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், தெற்கு கரோலினா கடற்பகுதியில் சீன பலூன் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களையும் அமெரிக்க கடற்படை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது. மேலும், நீருக்கு அடியில் பயணிக்கக் கூடிய ஆளில்லா இயந்திரத்தை அனுப்பி பலூனின் பாகங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்த பலூனை ஆய்வு செய்வதன் மூலம், சீனாவின் தொழில்நுட்ப வசதிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
இந்த நிலையில்தான், அமெரிக்காவைப் போலவே, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட சீனாவின் எதிரி நாடுகளையும் சீனா உளவு பார்த்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன், வாஷிங்டனில் உள்ள சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளிடம் கூறுகையில், ‘‘சீனாவின் உளவு பலூன்கள் சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹெய்னான் மாகாணத்தில் இருந்து பல வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பலூன் மூலம், ஜப்பான், வியட்னாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ராணுவ தளவாடங்கள் குறித்த தகவல்களை சீனா திரட்டி இருக்கிறது.
இந்த உளவு பலூன்கள் 5 கண்டங்களில் பறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை செய்ய ஏராளமான உளவு பலுான்களை சீன அரசு தங்கள் வசம் வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் ஹவாய், ப்ளோரிடா, டெக்சாஸ், குவாம் மாகாணங்களில் இது போன்ற பலூன்கள் தென்பட்டன. இந்த 4 பலூன்களில் 3 பலூான்கள், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி வகித்த காலத்தில் கண்டறியப்பட்டன. எனினும், கடந்த வாரம் கண்டறியப்பட்டபோது தான், அது சீன உளவு பலூன் என்பது தெரியவந்தது’’ என்று கூறியிருக்கிறார். அதேசமயம், இந்த உளவு பலூன் எப்போது இந்தியாவை உளவு பார்த்தது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.