பாரத பிரதமர் நரேந்திர மோடியை அழிவில்லாதவர் என்று சீன இளைஞர்கள் புகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபகாலமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முட்டல் மோதலுமாக இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சீனா குடியிருப்புகளை கட்டி இருக்கிறது. அதேபோல, கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இப்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அவ்வப்போது எல்லைப் பிரச்னைகள் எழுந்து வருகிறது. அதேசமயம், சீன நெட்டிசன்களால் கொண்டாடப்படும் வெளிநாட்டுத் தலைவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யமான தகவல்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி டிப்ளமேட்’ என்கிற பத்திரிகையில், சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது? என்கிற தலைப்பில், அந்நாட்டின் சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்துவரும் பிரபல பத்திரிகையாளரான சுன்ஷான் என்பவர் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி இருக்கிறார். இக்கட்டுரையில்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடியை, சீன இளைஞர்கள் கொண்டாடி வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது, உலகம் முழுவதும் இயங்கி வரும் ட்விட்டர் சமூக வலைதளத்தைப் போலவே சீனாவில், ‘சினா வெய்போ’ என்கிற சமூக வலைதளம் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த சமூக வலைத்தளத்தை சுமார் 58 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த வலைத்தளத்தில்தான் பாரத பிரதமர் மோடியை ‘மோடி லவோக்சியன்’ (அழிவில்லாதவர் மோடி) என்று சீன இளைஞர்கள் செல்லப் பெயர் வைத்து அழைத்து வருகிறார்களாம். குறிப்பாக, மோடியின் உடைகள் சீனர்களை பெரிதும் கவர்ந்திருப்பதாகவும், அவரது கொள்கைகள் வித்தியாசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்களாம். மேலும், மற்ற தலைவர்களைவிட மோடி மிகவும் அற்புதமானவர் என்று சீன நெட்டிசன்கள் நினைப்பதாக அக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
தவிர, மேற்கத்திய நாடுகள் மிகவும் விரும்பும் தேசமாக இந்தியா இருப்பது எப்படி? அதேசமயம், மேற்கத்திய நாடுகள் சீனாவை மட்டும் ஏன் குறிவைக்கிறார்கள்? என்பது குறித்துத்தான் அதிகம் விவாதிக்கிறார்களாம். இதுகுறித்து சுன்ஷான் கூறுகையில், “எனது 20 வருட பத்திரிகை அனுபவத்தில், எந்தவொரு வெளிநாட்டு தலைவரையும் சீனர்கள் பட்டப்பெயரிட்டு அழைத்தை பார்த்ததில்லை. ஆனால், இந்திய பிரதமர் மோடியை புகழ்வது மிகவும் அபூர்வமானது. மோடி அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார். மோடிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதான்…