நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும்: நிதியமைச்சகத்தின் பொருளாதார அறிக்கை!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும்: நிதியமைச்சகத்தின் பொருளாதார அறிக்கை!

Share it if you like it

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதமாக வளர்ச்சி காணும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இலங்கை திவாலான நிலையில், பாகிஸ்தானும் திவாலாகி விட்டதாக அந்நாட்டின் அமைச்சர் கூறியிருக்கிறார். இதேபோல, பல்வேறு நாடுகளும் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அதேசமயம், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், வளர்ந்து வரும் நாடான நமது இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகள் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்தான், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவிகிதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சம் வெளியிட்டிருக்கும் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், “உலகளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். கடந்த ஜனவரி மாதம் மொத்த விலை பணவீக்கம் குறைந்ததற்கேற்ப, சில்லரை பணவீக்கமும் மிதமானதாக இருக்கும்.

மேலும், சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை மிதமாக இருப்பது, நுகர்பொருள் இறக்குமதியில் சரிவு ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கலாம். சமாளிக்கக்கூடிய அளவிலான நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் பெரிய நாடுகளின் மத்தியில் அதிக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே தற்போது புதிய தொற்று பரவல், புவிசார் அரசியல் அழுத்தங்கள் ஆகியவற்றால் சவால்கள் எழுநிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it