கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் மதபோதகர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கும் நிலையில், ஹிந்துக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சிறுபான்மையினர் ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏன் பயன்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் மதபோதகர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த வாரிய உறுப்பினர்களுக்கான நிதியுதவித் திட்டம், மே 25-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மதபோதகர்கள், கல்வியாளர்கள், பாடகர்கள், கல்லறைத் தொழிலாளர்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்ல ஊழியர்கள், தொழுநோய் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள், மாதச் சம்பளம் இல்லாத பணியாளர்கள், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தேவாலயப் பணியாளர்கள் இந்த நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் பெற்று, விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பணிபுரியும் ஊராட்சிகளில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
வழிகாட்டுதல்களின்படி, பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், உறுப்பினர் பதிவு காலம் 5 ஆண்டுகள். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், நலத்திட்ட உதவிகளுக்கு தகுந்த சான்றுகளுடன் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றி 60 வயதை அடைந்தால் முதியோர் ஓய்வூதியம் பெறலாம். இருப்பினும், 60 வயதிற்குட்பட்ட ஒருவர், நோய் காரணமாக வேலை செய்ய முடியாத நிலையில், மேற்கூறிய நிலையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முதியோர் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கிறிஸ்தவ மதபோதகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தி.மு.க. அரசின் கொள்கையை இந்து முன்னணி கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளரும், சென்னை நகரத் தலைவருமான ஏ.டி.இளங்கோவன் தனது ட்விட்டர் பதிவில், “ஹிந்துக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சிறுபான்மையினர் ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?” என்று தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.