கோவையில் சட்டவிரோதமாக மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. போஸ்டரை பா.ஜ.க.வினர் கிழித்ததால், போலீஸாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதித்த மாநாகராட்சி நிர்வாகம், அரசியல் கட்சியினரும், பொது அமைப்பைச் சேர்ந்தவர்களும் போஸ்டர்களை அகற்றிக் கொள்ள 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்தது. மேலும், அப்படி சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் தங்களது போஸ்டர்களை அகற்றிக் கொண்டனர்.
ஆனால், அவிநாசி சாலை மேம்பாலத் தூண்களில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் கூடிய மிகப்பெரிய அளவிலான தி.மு.க. போஸ்டர்கள் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. எனவே, தி.மு.க.வின் போஸ்டர்களையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தி.மு.க.வினர் போஸ்டர்களை அகற்றாவிட்டால், தாங்களே போஸ்டர்களை அகற்றுவதாகவும் அறிவித்தனர். பின்னர், போலீஸாரும், வருவாய்த்துறையினரும் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போஸ்டர்களை அகற்றுவதாக வாக்குறுதி அளித்து கலைந்து போகச் செய்தனர்.
எனினும், தி.மு.க. போஸ்டர்கள் அகற்றப்படவில்லை. எனவே, போஸ்டர்களை அகற்றுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அவினாசி சாலையில் பீளமேடு கொடீசியா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பா.ஜ.க.வினர், கோவை கலெக்டர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவலறிந்த தி.மு.க.வினரும் சம்பவ இடத்தில் குவிந்தனர். எனவே, போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸாரும், வருவாய்த் துறையினரும் பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தி.மு.க.வின் பிரமாண்ட போஸ்டர்களை பா.ஜ.க.வினர் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து, போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும், தி.மு.க.வினருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. பின்னர், தி.மு.க. போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போலீஸ் வாகனத்தை மறித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, வேறுவழியின்றி பா.ஜ.க.வினரை இறக்கி விட்டனர் போலீஸார். இரவு நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் கொடீசியா சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.