ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்று வந்தால் தமது தலைவர் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என செல்வ பெருந்தகை புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈ.வெ.ரா – 46. இவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். அந்த வகையில், தற்போது அத்தொகுதி காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து, ஈரோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அத்தொகுதிக்கான வேட்பாளராக யார்? முன்னிறுத்தப்படுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. அந்த வகையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
டெல்லி மேலிடத்தின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் விமர்சனம் செய்ய கூடியவர் இளங்கோவன். இவர், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால் தங்களை என்ன? பாடுபடுத்துவார் என அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலக்கம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக இருப்பவர் செல்வ பெருந்தகை. இவரை, மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் பெரும் உள்ளடி வேலை நடந்து வருகிறது. சட்டமன்றக்குழு தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இன்றுவரை அவர் போராடி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், இளங்கோவன் வெற்றி பெற்று வந்தால் தமது பதவிக்கு வேட்டு வைத்து விடுவாரோ என்று அவர் புலம்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.