அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி!

அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி!

Share it if you like it

2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியை இழந்த நிலையில், டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார்.

2019 பார்லிமென்ட் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய எம்.பி. ராகுல் காந்தி, மோடி என்று குடும்பப் பெயர் இருக்கும் அனைவரும் திருடர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்திருந்தார். இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவது போல இருப்பதாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, டெல்லி துக்ளக் லேன் சாலையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு பதில் கடிதம் எழுதி இருந்த ராகுல்காந்தி, “கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்துள்ளேன். கடந்த காலங்களில் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது. அதற்கு நன்றி, அரசு உத்தரவுக்கு நான் கட்டுப்படுவேன்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி நேற்று காலி செய்தார். பங்களாவை காலி செய்த அவர், சாவியை அரசிடம் ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசிப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மக்களவை உறுப்பினர் என்கிற அடிப்படையில் சோனியா காந்திக்கு டெல்லி ஜன்பத் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it