தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், கொரோனாவுக்கு லீவு முடிந்துவிட்டது, மக்களே உஷார் என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சீனாவிலிருந்து 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 2020-ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. 2021-ம் ஆண்டு சிறிது குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ், மீண்டும் உருமாறிய வைரஸாக பூதாகரமெடுத்து தாக்கத் தொடங்கியது. இதனால், உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்ததால், இங்கும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில், தமிழகத்திலும் தொடர்ந்து லாக்டவுன் போடப்பட்டு வந்தது. கொரோனா குறையும்போது, லாக்டவுனில் சில தளர்வுகளும், அதிகரிக்கும்போது சில கெடுபிடிகளும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால், கொரோனா லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. எனினும், லாக்டவுன் விதிமுறைகளை எந்தக் கட்சிகளும் முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, லாக்டவுனில் மீண்டும் கெடுபிடி காட்டப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜனவரி மாதம் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, லாக்டவுன் ரத்து செய்யப்பட்டது. ஆகவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை கொரோனாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக, தி.மு.க. அரசை வச்சு செய்தனர் நெட்டிசன்கள்.
இந்த நிலையில்தான், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கொரோனாவுக்கு லீவு முடிந்து விட்டதாகவும், மீண்டும் டூட்டியில் சேரும்படியும் உத்தரவிடுவதுபோல, தி.மு.க. அரசை கிண்டல், கேலி செய்து சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.