ஹிந்து இளைஞர், முஸ்லீம் பெண் காதல் திருமணம்… போராட்டத்தில் குதித்த பெண்ணின் பெற்றோர்!

ஹிந்து இளைஞர், முஸ்லீம் பெண் காதல் திருமணம்… போராட்டத்தில் குதித்த பெண்ணின் பெற்றோர்!

Share it if you like it

விஜயபாஸ்கர் ஆயிஷா பேகம் என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரித்து வைக்கக் கோரி பெண்ணின் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். கார் டிரைவரான இவர், திருவதிகை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்கிற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், விழுப்புரம் சென்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஆயிஷாவின் பெற்றோரோ, மகளை காணவில்லை என்று உறவினர்களுடன் சென்று பண்ருட்டி போலீஸில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் அழைத்ததின் பேரில் நேற்று இரவு விஜயபாஸ்கர், ஆயிஷா பேகம் இருவரும் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனது கணவர் விஜயபாஸ்கருடன்தான் செல்வதாக ஆய்ஷா பேகம் தெரிவித்தார். இதையடுத்து, ஆயிஷா மேஜர் என்பதால், அவரது முடிவே இறுதியானது என்று கூறி, அவரை விஜயபாஸ்கருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், போலீஸார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியல் காரணமாக இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலையில் மீண்டும் பெண்ணுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாக போலீஸார் தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது. ஆனால், காவல் நிலையத்திற்கு வந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய காதல் ஜோடியினர் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

அங்கு ஒரு டி.எஸ்.பி. தலைமையில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், உறவினர்கள் பெண்ணிடம் பலமுறை பேசியும், திருமணம் செய்து கொண்டவருடனே தான் செல்லப்போவதாக ஆயிஷா பேகம் பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த பெற்றோர் அழுதபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதன் பிறகு விஜயபாஸ்கருடன் ஆயிஷா பேகம் அனுப்பி வைக்கப்பட்டார்.


Share it if you like it