இராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா மற்றும் நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த விழா என முப்பெரும் விழாக்களை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடலூரில் நேற்று அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
மாலை 4 மணியளவில் ஆர்ய வைஸ்ய திருமண மண்டபம் அருகில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலம், சன்னதி தெரு, தேரடித் தெரு, சுப்ராய செட்டித் தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜ நாயுடு தெரு, போடிச்செட்டித் தெரு வழியாகச் சென்று இறுதியில் சன்னதித் தெருவில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவுற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை கே.பாரிவள்ளல் கொடியசைத்து துவக்கி வைத்தார். அணிவகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த தொண்டர்கள் 453 பேர், சீருடை அணியாத ஆண்கள் 278 பேர், பெண்கள் 36 பேர் என மொத்தம் 767 பேர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் டி.கதிர்வேல் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடதமிழகத்தின் மாநில குடும்ப ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் நன்றி கூறினார்.