நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது சீரகம். சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசிக்காக என்பதையும் தாண்டி, அதன் மருத்துவ குணத்திற்காகத்தான். அப்படிப்பட்ட சீரகத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.
சீர் + அகம் = சீரகம். அதாவது, உடலை சீராக்குவதுதான் சீரகம். சீரகத்துடன் சிறிது மிளகு பொடித்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் நல்லது. ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். அதேபோல, சீரகத்தை வறுத்து சூடான நீரில் கலந்து, அதை கொதிக்க வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம். இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும். சீரகத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. ஆகவே, இதை தினமும் உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்தும். இரவில் 2 தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, வெறும் வயிற்றில் குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தும். அதோடு, உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.
குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது. திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். ரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் சீரகம் உதவுகிறது. உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும். சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.
சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும். சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொண்டு, இரண்டு சிட்டிகை வீதம் தினம் 2 வேளை சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் 2 வெற்றிலை, 4 நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும். சீரகத்துடன் 3 பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். சீரகத்தை அரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும். சிறிது தனியாவுடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்றால் அதிகம் மது உண்ட போதை தணியும். அதேசமயம், சீரகத்தை ஒரு நாளைக்கு 300 முதல் 600 மில்லிகிராம்தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்கும். அதோடு, முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தை அதிகமாக சாப்பிடுவார்கள். எனவே, கரு நிற்க வேண்டுமானால் பெண்கள் சீரகத்தை அளவாக சாப்பிட வேண்டும். அதேசமயம், பால் கொடுக்கும் பெண்கள் சீரகத்தை தாராளமாக சாப்பிடலாம். நன்கு பால் சுரக்கும்.