நமது வரலாற்றை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த வேலையை முதலில் செய்தவர் சாவர்க்கர்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “நாம் காலனி ஆதிக்கத்தின் எச்ச சொச்சங்களில் இருந்தும் முழுமையாக விடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆகவே, நாம் முதலில் காலனி ஆதிக்கத்திலிருந்து நமது வரலாற்றை விடுவிக்க வேண்டும். அந்த வேலையை முதலில் செய்தவர் வீர் சாவர்க்கர்தான். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று சாவர்க்கர் கூறியிருந்தார். இந்திய சுதந்திர வரலாற்றில் அகிம்சை போராட்டங்களுக்கு நிறையவே பங்கு இருக்கிறது. அதேசமயம், தற்போதுள்ள வரலாற்று நூல்களில் மற்ற முறையிலான சுதந்திரப் போராட்டங்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை என்று கூறப்படுவது உண்மையல்ல.
அகிம்சை போராட்டங்களுக்கு இடையே ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றிருக்கா விட்டால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்க இன்னும் பல 10 ஆண்டுகள் ஆகியிருக்கும். நமக்குக் கிடைத்த சுதந்திரம் ஒன்றும் சகாயமாக, தானமாக வழங்கப்பட்டது அல்ல. லட்சக்கணக்கான மக்கள் சிந்திய ரத்ததாலேயே சுதந்திரம் கிடைத்தது. இன்றையதினம் டெல்லி கர்தவ்யபாதையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பார்க்கும்போது எனக்கு நிறைய நம்பிக்கை பிறக்கிறது. ஏனெனில், ஏற்கெனவே வரலாறு என்ற பெயரில் ஒரு கதை இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. அது மக்களிடம் நம்பும்படி சொல்லப்பட்டிருக்கிறது. வரலாறு, கல்வி என்ற பெயர்களில் ஒரு பார்வையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை போராட்டங்களுக்கு பங்கில்லை என்று நான் சொல்லமாட்டேன். அது வரலாற்றின் ஒரு பகுதி தான். அது சுதந்திரத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது. ஆனால், ஆயுதப் போராட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. 1857 புரட்சி அதற்கு வித்திட்டது. அரசாங்கமும், வரலாற்று ஆய்வாளர்களும் இந்த உண்மையை புதிய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. வரலாறு வெறும் மிதவாதிகள், போராளிகள் வேறுபாடுகளை விவரிப்பதாக இல்லாமல், உண்மையை சொல்வதாக இருக்க வேண்டும். இந்தியாவை முதன்முதலில் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது முகலாயர்கள் பேரரசு என்பது ஏற்பதற்கல்ல. அதற்கு முன்னதாகவே, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகள் இருந்திருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.