பிரதமர் மோடியை விமர்சித்த காங். மூத்த தலைவர் கைது!

பிரதமர் மோடியை விமர்சித்த காங். மூத்த தலைவர் கைது!

Share it if you like it

செய்தியாளர்கள் சந்திப்பில் பாரத பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்பதற்கு பதிலாக, நரேந்திர கௌதம் தாஸ் மோடி என்று விமர்சித்த, காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேராவை போலீஸார் கைது செய்தனர்.

அஸ்ஸாம் மாநிலம் ஹப்லாங் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், ஊடகப் பிரிவின் தலைவருமான பவன் கேரா, “அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை உருவாக்க முடியும் என்றால், முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உருவாக்க முடியும் என்றால், நரேந்திர கவுதம் தாஸ்… மன்னிக்க வேண்டும் தாமோதரதாஸ் மோடிக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று பேசினார்.

இது நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பெயரை கேரா வேண்டுமென்றே தான் தவறாக உச்சரித்தார் என்று குற்றம்சாட்டினர். மேலும், இதுகுறித்து ஹப்லாங் போலீஸில் புகார் செய்தனர். இதன் பேரில் ஐ.பி.சி. 153பி, 500, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் கேரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பா.ஜ.க.வினர் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராய்ப்பூருக்குச் செல்லும் இன்டிகோ விமானத்தில் பவன் கேரா ஏறி அமர்ந்திருந்தார். அப்போது, அஸ்ஸாம் போலீஸார் டெல்லி வி்மான நிலையத்துக்கு வந்து, விமான நிலைய அதிகாரிகளிடம் எஃப்.ஐ.ஆர். காப்பியை காட்டினார். இதையடுத்து, விமான ஊழியர்கள் பவன் கேராவை விமானத்தில் இருந்து இறங்குமாறு தெரிவித்தனர். அவர், விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு, டெல்லி போலீஸார் உதவியுடன் அஸ்ஸாம் போலீஸார் கேரைவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, பவன் கேராவை விமானத்தில் இருந்து இறக்கி போலீஸார் கைது செய்ததை கண்டித்து எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை மறித்து  தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், பவன் கேராவுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பவன் கேராவுக்கு 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


Share it if you like it