பி.எஃப்.ஐ.யை தடை செய்ய வேண்டும்: சர்வமத தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

பி.எஃப்.ஐ.யை தடை செய்ய வேண்டும்: சர்வமத தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Share it if you like it

டெல்லியில் நடந்த சர்வமதத் தலைவர்கள் கூட்டத்தில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சூஃபி முஸ்லிம்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் சார்பில் டெல்லியில் சர்வமத தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், சர்வ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தீர்மானத்தை விவாதித்து நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்தான், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று சூஃபி முஸ்லீம்கள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அஜித் தோவல் பேசுகையில், “சில குழுக்கள் நாட்டின் முன்னேற்றத்தைக் கெடுக்கும் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை, மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் மோதலையும், பிளவையும் உருவாக்குகின்றன. மட்டுமல்லாது இதன் செயல்பாடுகள் நாட்டை பாதிப்பதோடு, நாட்டிற்கு அப்பாலும் பரவுகிறது” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வேற்றுமையில் ஒற்றுமைக்கு பிரகாசமாக விளங்கும் நமது இந்தியாவின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் சில சமூக விரோதிகள் மற்றும் குழுக்களால் இந்தியா தற்போது கடினமான காலங்களை எதிர்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “தேச விரோத செயல்களில் ஈடுபடும் மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை பின்பற்றி, நமது குடிமக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் எந்த வகையிலும் சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பியதற்கான ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டால், அந்த அமைப்பு அல்லது நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிரு்தது.


Share it if you like it