தமிழகத்தை தாண்டினால்… தி.மு.க.வை கழுவி ஊற்றிய பிரதமர் மோடி!

தமிழகத்தை தாண்டினால்… தி.மு.க.வை கழுவி ஊற்றிய பிரதமர் மோடி!

Share it if you like it

தமிழகத்தைத் தாண்டினால் தி.மு.க.வுக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது என்று பாரத பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தற்போதே கூட்டணி வியூகத்தை வகுக்கத் தொடங்கி விட்டன. அந்த வகையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் உட்பட 26 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயரிடப்பட்டது. இதற்கு போட்டியாக ஆளும் பா.ஜ.க. தலைநகர் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில், அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) உட்பட 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி கட்சியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப்புக்கு வெளியே ஒரு ஓட்டு கூட பெற முடியாது. அதேபோல, தமிழக எல்லையை தாண்டினால் தி.மு.க. ஒரு ஓட்டுகூட பெற முடியாது. மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணியும் வெற்றி பெறாது. யாரையும் எதிர்ப்பதற்காவோ, பழிவாங்குவதற்காகவோ தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படவில்லை. மாறாக நாட்டை வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டது.

NDA என்பதன் பொருள் N – புதிய இந்தியா, D – வளர்ச்சியடைந்த நாடு, A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். வரும் 25 ஆண்டுகளில் ஒரு பெரிய இலக்கை அடைய நமது நாடு பெரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் தருணம் இதுவாகும். அந்த இலக்கு என்பது வளர்ந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதாகும். தேசமே முதன்மையானது, வளர்ச்சியே பிரதானமானது, மக்களை வலுப்படுத்துவதே முதன்மையானது என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள். இந்தியாவின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட காரணம் வலுவான மற்றும் திறத்தன்மையுடன் ஆட்சி தான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாட்டின் நலன் கருத்தியே ஆக்கப்பூர்வமான அரசியல் செய்தோம், எதிர்கட்சிகளின் ஊழலை வெளிக்கொணர்ந்தோம்.

மக்களின் முடிவுகளை என்றுமே அவமதித்தது இல்லை. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எப்போதும் முட்டுக்கட்டை போடவில்லை. நாட்டு மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கடந்த 9 ஆண்டுகாலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டுள்ளது. வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே இருந்த மக்களை வளர்ச்சி பாதைக்கு மாற்றியதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனை. காந்தி வழியிலும் அம்பேத்கர் வழியிலும் ராம்மனோகர் லோகியா வழியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. அரசியலில் யாரையும் போட்டியாக பார்க்கலாம். எதிரியாக பார்க்க கூடாது. ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் என்னையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் அவதூறாக பேசுவதையே வடிக்கையாக கொண்டுள்ளனர்” என்றார்.


Share it if you like it