தமிழக அலங்கார ஊர்தியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தமிழ்நாடு என்று பொறிக்கப்பட்டிருப்பதாக பரப்பி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாநில அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு டெல்லியில் நடைபெறும். அந்த வகையில், கடந்தாண்டு நடந்த அணிவகுப்புக்கு சில சர்ச்சைகள் காரணமாக தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிகழாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த அணிவகுப்பில் தமிழகம், ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள் சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளன.
இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளுக்காக சில தலைப்புகளை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த தலைப்புகளில் வலிமை மற்றும் சாதனை பெண்கள் தலைப்பை தமிழக அரசு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சை கோயில் பின்னணியில் தமிழகத்தின் பெண் பிரபலங்களான ஔவையார், வேலு நாச்சியார், தஞ்சை பாலசரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட சிலரின் சிலைகளை அமைத்து, தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்தி தமிழக அரசுத் தரப்பில் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் ஹிந்தியில் தமிழ்நாடு என்று பொறிக்கப்பட்டிருந்தது. உடனே, சில ஊடகங்களும், சமூக ஊடகங்களின் போலி போராளிகளும், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் தமிழக அலங்கார ஊர்தியில் தமிழில் பெயர் இல்லை என்று வதந்தியைப் பரப்பி வந்தனர். இது தமிழகத்தில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் தமிழகத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அலங்கார ஊர்தியில் 3 மொழிகள் இடம்பெற்றிருந்தது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதாவது, அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் ஹிந்தியிலும், பின் பகுதியில் ஆங்கிலத்திலும், இரு பக்கவாட்டுப் பகுதிகளிலும் தமிழிலும் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பக்கவாட்டு பகுதியில் நடனக் கலைஞர்கள் அணிவகுத்தும், நடனமாடியும் வந்ததால் தமிழில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், சில ஊடகங்கள் முன்பக்கப் பகுதியை மட்டும் எடுத்து வெளியிடவே, தமிழக அலங்கார ஊர்தியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.