21 வயது இளைஞரை 8 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து, அதை லைவ் வீடியோவாக எடுத்து பயங்கரவாதிக்கு அனுப்பி வைத்து பணம் பெற்ற 2 பயங்கரவாதிகளை போலீஸார் டெல்லியில் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளும், பயங்கரவாதத் தொடர்பில் இருப்பவர்களும் தலைநகரில் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியான பால்ஸ்வா டெய்ரியில் நடந்த சோதனையின்போது, பயங்கவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாகக் கருதி, சந்தேகத்தின் பேரில் 2 பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், ஒருவர் உத்தராகண்ட் மாநிலம் உத்தம்சிங் நகரைச் சேர்ந்த ஜக்ஜித்சிங் என்ற ஜக்கா) என்பதும், மற்றொருவர் டெல்லி ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் நௌஷாத் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 22 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, ஜக்காவிற்கு கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன், தற்போது பரோலில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், மற்றொரு நபரான நௌஷாத், ‘ஹர்கத் உல்-அன்சார்’ என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவன் என்பதும், இவன் 2 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவன என்பதும், வெடிகுண்டு வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவன் என்பதும் தெரியவந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 21 வயது இளைஞர் 8 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
அதாவது, தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டது ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் ஆகியோர்தான். இருவரும் அந்த இளைஞரிடம் முதலில் நட்பாக பழகி இருக்கிறார்கள். பின்னர், டிசம்பர் 14-ம் தேதி அந்த இளைஞரை ஆதர்ஷ் நகரில் இருந்து பால்ஸ்வா டெய்ரியில் உள்ள நௌஷாத்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு வைத்து அந்த நபரை இருவரும் கொலை செய்து, உடலை 8 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்கள். இச்சம்பவம் முழுவதையும் லைவ் வீடியோவாக எடுத்து, பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சோஹைல் என்பவனுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதற்காக கத்தாரில் உள்ள உறவினர் மூலம் நௌஷாத் வங்கிக் கணக்கிற்கு 2 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டிருக்கிறது.
நௌஷாத், சிறையில் இருந்த போது செங்கோட்டை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆரிப் முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சோஹைல் ஆகியோரை சந்தித்திருக்கிறான். அப்போது, அதிக செல்வாக்கு மிக்க ஹிந்துக்களைக் கொலை செய்யுமாறு நௌஷாத்திற்கு பணி வழங்கி இருக்கிறான் சோஹைல். அதேபோல, ஜக்ஜித் சிங்குக்கு, காலிஸ்தான் பிரிவினைவாத பிரசாரத்தை முன்னெடுக்குமாறு அசைன்மென்ட் வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர், சிறையிலிருந்து ஏப்ரல் 2022-ல் வெளியே வந்த நௌஷாத், தொடர்ந்து சோஹைலுடன் தொடர்பில் இருந்திருக்கிறான். இந்த சூழலில்தான், டெல்லியில் 21 வயது இளைஞரை கொலை செய்து, 8 துண்டுகளாக வெட்டி அதை லைவ் வீடியோவாக எடுத்து சோஹைலுக்கு அனுப்பி இருக்கிறான். போலீஸ் விசாரணையில் இச்சம்பவம் வெளியான நிலையில், தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.