சேலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக்கை மத்திய புலனாய்வு போலீஸாரும், தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் க்யூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், சேலத்தில் ஏற்கெனவே மேற்குவங்கத்தைச் சேர்ந்த அப்துல் அலிமுல்லா என்கிற பயங்கரவாதியை பெங்களூரு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, திருப்பூரில் ஆசிப் முசாப்தீன் என்கிற பயங்கரவாதியை கடந்த 3 தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று அனாஸ் அலி என்கிற பயங்கரவாதியை கைது செய்தனர்.
இந்த நிலையில்தான், சேலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள ஏ.பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் ஆசிக். இவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் டவுன் கோட்டை பகுதியிலுள்ள சின்னசாமி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தான். மேலும், செவ்வாய்ப்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வெள்ளி பட்டறையிலும் வேலை செய்து வந்தான். இவன், சமூக வலைதளங்களில் மதம் குறித்து தவறான தகவலை பரப்பி வந்ததோடு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறான்.
இதுகுறித்த தகவல் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸாரும் ஆசிக் வசித்து வந்த வீட்டிற்கு சென்று, சோதனை செய்தனர். மேலும், ஆசிக்கையும் பிடித்து விசாரணை செய்தனர். சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் ஆசிக், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆசிக் மீது சேலம் டவுன் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிக்கை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.