தேர்தல் முடிந்ததும் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கிய திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு !

தேர்தல் முடிந்ததும் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கிய திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு !

Share it if you like it

வடலூரில், அருள்திரு வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், அருள்திரு வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் அவர்களின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் “என் மண் என் மக்கள்” யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

அதன்பிறகு, அருள்திரு வள்ளலார் அவர்களின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *