உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏரியில் குளித்ததற்காக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, உயர் ஜாதி ஆண்கள் தாக்குவதாகக் கூறி, தி.மு.க.வினராலும், தி.க.வினராலும் சமூக வலைத்தளங்களில் பரபரப்படும் வீடியோ பொய்யானது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதாவது, கடந்த சில தினங்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பரப்புவது தி.மு.க.வினரும், திராவிடக் கழகத்தினருமதான். அந்த வீடியோவில், ஏரிக்கரை அருகே ஒரு இளம்பெண்ணை சுமார் 7 பேர் சேர்ந்து தாக்குவதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. உடனே, அந்தப் பெண் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்பெண் ஊருக்கு பொதுவான ஏரிவில் குளித்ததாகவும், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த உயர் ஜாதி ஆண்கள் அப்பெண்ணை தாக்குவதாகவும் ஒரு கட்டுக்கதையை தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதோடு, மறக்காமல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்ததாகவும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இதை உண்மை என்று பலரும் நம்பி வந்த நிலையில்தான், இச்சம்பத்தின் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, முதலில் இச்சம்பவம் நடந்தது உத்தரப் பிரதேசத்தில் நடந்தது அல்ல, மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்பது தெளிவாகி இருக்கிறது. இரண்டாவதாக. இச்சம்பத்தில் தொடர்புடைய இளம்பெண் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். மேலும், அப்பெண் ஏரியில் குளித்ததற்காக உயர் ஜாதியினர் அவரை தாக்கவில்லை என்கிற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதோடு, இச்சம்பவம் நடந்தது இப்போது அல்ல, கடந்தாண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி நடந்திருக்கிறது என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
விஷயம் இதுதான்….
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் பீபால்வா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அப்பெண். இவரும், இவரது சகோதரியும் தங்களது தாய் மாமன் மகன்களுடன் பேசி பழகி இருக்கிறார்கள். இந்த விஷயம் அப்பெண்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட இரு சகோதரிகளையும், அவரது தாயும், சகோதரர்களும், உறவினர்களும் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். இதை அங்கு நின்றிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதவிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பெண்களின் தாயார், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ஆனால், இதை எல்லாம் தெரியாமலோ அல்லது மறைத்து விட்டோ, உண்மைக்குப் புறம்பாக, இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது போலவும், பட்டியல் சமூக பெண் ஏரியில் குளித்ததற்காக உயர் ஜாதி ஆண்கள் அடித்து துன்புறுத்துவது போலவும், ஒரு கதையை திரித்து, இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் என்று சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள் தி.மு.க.வினரும், திராவிடர் கழகத்தினரும். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஒத்து ஊதி வருகிறார்கள். ஆனால், உண்மை ஒருநாள் வெளிப்பட்டே ஆகும் என்பதுபோல, தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.