தமிழக அரசு வ.உ.சி.யின் பெயரில் உள்ள பிள்ளை பெயரை நீக்கியிருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட போராளி, கடல் வர்த்தகத்தில் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தை உடைத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இவர், இந்தியா விடுதலை அடைய வேண்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக மிக தீவிரமாக போராடியவர். அந்தவகையில், சுதேசிய இயக்கத்தை தமிழகத்தில் ஆதரித்தவர். மேலும், இவரை “கப்பலோட்டிய தமிழன்” என்று அனைவரும் அழைத்து வருகின்றனர்.
பாரத தேசத்திற்காக வ.உ.சி. அனுபவித்த கொடுமைகள், கஷ்டங்களை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. சிறைச் சாலையில், அவர் சாதாரண தண்டனை கைதி போன்று அல்லாமல், பல்வேறு கொடுமைகளை அனுபவித்தவர். காளைகள் இழுக்க வேண்டிய செக்கை, மதிய நேரத்து உச்சி வெயிலில் இழுத்தவர் வ.உ.சி. இவ்வாறாக பல்வேறு கொடுமைகளை அவர் அனுபவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பு மலர் ஒன்றை அண்மையில் வெளியிட்டன. இந்நூலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், வ.உ.சி.யின் புகைப்படம் மற்றும் அவரது கையொப்பம் அச்சிடப்பட்டு இருந்தன. அதில், ‘பிள்ளை’ என்பதை மட்டும் தமிழக அரசு அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதுதான், தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் அடையாளங்களை தி.மு.க. அரசு மறைக்க முயல்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.