தருமபுரி; அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாணவ, மாணவிகள் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறை விளக்க தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், செய்முறை தேர்வு முடிந்த பின் 11 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகள் நேற்றைய தினம் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து, பள்ளி மாணவ மாணவிகள் தங்களது வகுப்பறைக்கு சென்று இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, வகுப்பில் இருந்த பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.
அந்தவகையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கெஞ்சி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதேபோன்ற, சம்பவம் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்பறையை சூறையாடிய மாணவர்களில் சிலர் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை மூடி மறைப்பது நாட்டிற்கு நல்லது அல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.